கேரளாவில் தொடரும் புரட்சி…. சான்றிதழில் ஜாதி, மதம் இல்லை என பிரகடனம் செய்த 1.24 லட்சம் மாணவர்கள்!

திருவனந்தபுரம்: கேரளா பள்ளிகளில் தங்களுக்கு ஜாதி, மதம் எதுவும் இல்லை 1.24 லட்சம் மாணவர்கள் பிரகடனம் செய்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் சி. ரவீந்தராநாத் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராதல் உள்ளிட்ட அடுத்தடுத்த சமூக சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சமூகப் புரட்சிகளின் தாய்நிலமான தமிழகத்தில் கூட இன்னமும் எதிர்ப்புகளும் ஏகடியங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த வரிசையில் தற்போது சான்றிதழ்களில் ஜாதி, மதம் எதுவும் எங்களுக்கு இல்லை என 1.24 லட்சம் மாணவர்கள் கேரளாவில் பிரகடனம் செய்துள்ளனர். கேரளா சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சிபிஎம் எம்.எல்.ஏ. டி.கே முரளி இது தொடர்பான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இதற்கு கல்வி அமைச்சர் சி. ரவீந்தரநாத் அளித்த பதில்:

சான்றிதழ்களில் ஜாதி, மதம் இல்லை என 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொத்தம் 1,23,630 மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் 11-ம் வகுப்பில் 278, 12-ம் வகுப்பில் 239 பேர் ஜாதி, மதம் எதுவும் எங்களுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளனர். 2017-18 கல்வி ஆண்டின் அடிப்படையிலான புள்ளி விவரங்கள் இவை.

மாநிலம் முழுவதும் உள்ள 9,000 பள்ளிகளில் இருந்து இந்த புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மாவட்டம் அல்லது மண்டல வாரியாக எத்தனை பேர் இதேபோல் பதிவு செய்துள்ளனர் என்கிற விவரங்கள் இல்லை. இவ்வாறு அமைச்சர் ரவீந்தரநாத் கூறினார்.

tamil.oneindia.com

TAGS: