ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்திவந்த வேளையில் மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிலர் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கத்தில் சேர்வதற்காக இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்றனர்.
இந்த வரிசையில் கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் மற்றும் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 21 பேர் கடந்த 2016-ம் ஆண்டு திடீரென்று தங்களது வசிப்பிடங்களில் இருந்து மாயமாகி விட்டனர்.
இவர்களில் பலர் வெவ்வேறு நாடுகளின் வழியாக சிரியாவுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். பயங்கரவாத முகாம்களில் போர் பயிற்சி பெற்றதாக மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் முன்னர் தெரிவித்திருந்தன.
இவர்களில் காசர்கோடு மாவட்டம், படானா என்ற இடத்தை சேர்ந்த ஷியாஸ், அவரது மனைவி அஜ்மலா மற்றும் இந்த தம்பதியரின் குழந்தை ஆகிய மூன்று பேரும் திரிக்காப்பூர் பகுதியை சேர்ந்த முஹம்மது மன்சத் என்பவரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படையினருக்கும் முன்னர் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை கேரள மாநில போலீசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.