மறந்து போன மனித நேயம்- விபத்தில் சிக்கிய பெண்ணை செல்போனில் படம் பிடித்த மக்கள்..

திருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் பிலோமினாள் (வயது57). இவர் கூடையில் மீன்களை எடுத்துச் சென்று வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார்.

நேற்று காலை 11 மணி அளவில் தனது மீன் கூடையுடன் பிலோமினாள் வியாபாரத்திற்காக சென்றார். அவர் சிறையின் கீழ் பகுதியில் மெயின் ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக சென்றனர். அப்போது அவர்களது மோட்டார் சைக்கிள் பிலோமினாள் மீது மோதியது. ஆனாலும் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டனர்.

விபத்தில் சிக்கிய பிலோமினாள் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவர் விபத்தில் சிக்கிய பகுதி முக்கியமான சாலை என்பதால் அதிக அளவு வாகனங்கள் அந்த வழியாக சென்று வந்தன. ஆனாலும் அந்த வழியாக சென்ற யாரும் மனிதாபிமானத்துடன் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்யவில்லை.

அரசு வாகனங்கள் கூட இந்த விபத்தை கண்டு கொள்ளாமல் சென்றது. இதைவிட கொடுமையாக அந்த பகுதியில் திரண்ட பொதுமக்கள் சிலர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த பிலோமினாளை தங்கள் செல்போனில் படம் பிடிக்க தொடங்கினார்கள்.

அப்போது அந்த வழியாக சென்ற சமூக சேவகரான நவ்கல் என்ற வாலிபர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த வழியாகச் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி அந்த மூதாட்டியை அதில் ஏற்றி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

அவருக்கு டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சை காரணமாக பிலோமினாள் உயிர் தப்பினார். சிறிது நேரம் தாமதமாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருந்தால் அவரை காப்பாற்ற முடியாமல் போய் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் இது பற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். பிலோமினாள் உயிரை காப்பாற்றிய அந்த வாலிபரை போலீசார் பாராட்டினார்கள். உயிர் தப்பிய பிலோமினாலும் அவருக்கு தனது நன்றியை கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதற்கிடையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

கொச்சியில் கடந்த சில மாதங்களுக்கு இதே போல் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய வாலிபரை யாரும் காப்பாற்றாத போது ஒரு பெண் போராடி அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து காப்பாற்றினார். இந்த காட்சி வாட்ஸ்-அப்பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இது போல ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

-athirvu.com

TAGS: