காவிரி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்- வேல்முருகன் கைது

உளுந்தூர்பேட்டை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அந்த சுங்கச்சாவடியைச் சூறையாடினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காவிரி குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு உத்தரவிட்டும், அதற்கான ஆறு வார கால அவகாசம் முடிந்து மத்திய அரசு அதைச் செயல்படுத்தவில்லை.

இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள், மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமையாததைக் கண்டித்தும், சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை எதிர்த்தும் ஏப்ரல் 1ம் தேதி சுங்கச்சாவடிகள் முற்றுகைப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

அதன்படி, இன்று காலை 11 மணியளவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது, மத்திய அரசுக்கு எதிராகக் கோஷமிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், அங்கு டோல்கேட் கட்டணம் செலுத்த மறுத்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.

இதனையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: