வட மாநிலங்களில் பயங்கர வன்முறை: உத்தரபிரதேசத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுடெல்லி,

தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த 20-ந் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.

இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்று தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஏப்ரல் 2-ந் தேதி (அதாவது நேற்று) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு தலித்் அமைப்புகள் அழைப்பும் விடுத்து இருந்தன. இதனால் தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்புகள் நேற்று நாடு முழுவதும் தீவிர போராட்டத்தில் குதித்தன. அப்போது வட மாநிலங்களில் பயங்கர வன்முறையும் வெடித்தது.

உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, மீரட், அசம்கார் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. முழு அடைப்பையும் மீறி பஸ்கள் ஓடியதால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அசம்கார் நகரில் 2 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர். மீரட்டில் பல கார்களை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர்.

இதேபோல் ஏராளமான பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. வன்முறைக்கு 2 பேர் பலியானார்கள். 40 போலீசாரும், 35 ஆர்ப்பாட்டக்காரர்களும் காயம் அடைந்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.  மாணவ மாணவிகளின் நலன் கருதி  ஆக்ரா, மீரட், அசம்கார் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று வழக்கம் போல் நடைபெறும் வகுப்புகள் நடைபெறாது எனக்கூறப்பட்டுள்ளது. 10-வகுப்பு 12-வகுப்பு பொதுத்தேர்வுகள், பல்கலைகழக தேர்வுகள்,  திட்டமிட்டப்படி நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-dailythanthi.com

TAGS: