சென்னை: தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய வேல்முருகன் தமிழகத்தில் ஐபிஎல்போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் சார்பில் வலியுறுத்தினார். ஐபிஎல் நிர்வாகம், தமிழக அரசு, காவல்துறை ஆகியோர் ஐபிஎல் போட்டிகளுக்கு ஆதரவு தரக்கூடாது என்றும் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.
போட்டி நடத்தினால்
மீறி கிரிக்கெட் போட்டி நடத்தினால் தங்களின் அமைப்பை சேர்ந்தவர்கள் டிக்கெட் பெற்று மைதானத்துக்குள் சென்று போராட்டம் நடத்துவார்கள் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.
புறந்தள்ளினால்
மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்றும் தமிழகத்தின் கோரிக்கையை புறந்தள்ளினால் மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.
தண்ணீர் கொடுத்தால் மின்சாரம்
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி மத்திய அரசின் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடப்படும் என்றும் கர்நாடகா தண்ணீர் கொடுத்தால் நாங்கள் மின்சாரம் தருவோம் என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழ் தேசிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசு அலுவலகங்கள்
ஏப்ரல் 10 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களை இழுத்து மூடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் வேல்முருகன் எச்சரித்தார்.
சுப்ரீம்கோர்ட் அநீதி
மேலும் காவிரி இறுதி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அநீதி இழைத்து விட்டதாகவும் வேல்முருகன் குற்றம்சாட்டினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.