வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்? போராட்டங்கள்தான் தீர்வா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை சுற்றித்தான் கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது.

பெரிய கட்சிகளும், இயக்கங்களும் ரயில் மறியல், கடையடைப்பு, உண்ணாவிரதம் என்று போராடி வருகிறது என்றால், சாமானிய மனிதர்கள் இந்தியா தமிழ் நாட்டிற்கு துரோகமிழைத்துவிட்டது (IndiaBetraysTamilNadu) என்ற ஹாஷ்டாக்கில் ஆயிரக்கணக்கான ட்வீட்டுகளும், ஃபேஸ்புக் பதிவுகளும் தொடர்ந்து பதிவு செய்துவருகிறார்கள்.

தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் அடங்கியது அல்ல, தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்றும் உறுதியளித்தது.

இதன்பின்னும் போராட்டம் தொடரதான் செய்கிறது.

</strong><strong>மத்திய அரசுதான் காரணம்</strong><strong>

தமிழகத்தில் நடக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் காரணம் மத்திய அரசுதான் என்கிறார் இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன்.

“கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் சமயத்தில் காவிரி தொடர்பாக முடிவு எடுத்தால் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்கிறது மத்திய அரசு. அதாவது, கர்நாடகத்தில் வன்முறை ஏற்படும் என்று கூறி, சட்டத்தை மதிக்கும் தமிழகத்திற்கு நீதியை மறுக்கிறது மத்திய அரசு. அப்படியானால் இதற்கு என்ன அர்த்தம்? வன்முறையாக நடந்து கொள்ளும் தரப்பிற்குதான் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்கிறதா மத்திய பா.ஜ.க அரசு?” என்று கேள்வி எழுப்புகிறார் செந்தில்நாதன்.

“நீதிமன்றமே சொல்லிவிட்டது பின் ஏன் போராடுகிறீர்கள் என்கிறார்கள். சரி… இதற்கு முன்பும் பலமுறை நீதிமன்றமும் தீர்ப்பாயமும் சொல்லி இருக்கின்றன. தீர்ப்புகளையும் வழங்கி இருக்கின்றன. என்றாவது அதனை மதித்து இருக்கிறதா கர்நாடகம்? அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வரும் போதெல்லாம் கலவரத்தில் இறங்குவது மட்டும் தான் அவர்களது போக்காக இருகிறது. எப்போதும் அவர்களுக்கு சார்பாகவே நடந்து வருகிறது மத்திய அரசு” என்கிறார் அவர்.

போராடினால் மட்டுமே நீதி

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. அது குறித்து தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்காமல், ‘ஸ்கீம்` என்று குழப்புவது யார் நலனுக்காக. அதுவும், இனி 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடே செய்யக் கூடாது என்று குறிப்பிடும் ஒரு தீர்ப்பு எவ்வளவு தெளிவாக இருந்திருக்க வேண்டும்?. அவ்வாறெல்லாம் இல்லாமல் ஸ்கீம் என்று குழப்புவது ஏன்?” என்று வினவுகிறார் ஆழி செந்திநாதன்.

இனி அரசுகளை நம்பி பயனில்லை. போராடினால் மட்டுமே நீதி கிடைக்கும் என்று சாமானிய தமிழனும் நம்ப தொடங்கிவிட்டான். அதன் வெளிப்பாடுதான் இந்த போராட்டங்கள் என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

தீர்ப்பே விமர்சனத்திற்குரியது

உச்சநீதிமன்ற தீர்ப்பே விமர்சனத்திற்குரியது. எங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை அதற்காகாதான் இந்தப் போராட்டம் என்கிறார் மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்.

திருமுருகன், “1924 ஆம் ஆண்டு நதிநீர் பங்கீட்டின்படி, காவிரியில் தமிழகத்தின் பங்கு 370 டி.எம்.சி. இது குறைந்து குறைந்து இப்போது 177 டி.எம்.சி என்று வந்து நிற்கிறது. நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக் கொள்வது வழமை இல்லை. ஆனால், உலக வழக்கத்தில் இல்லாதபடி நீதிமன்றம் தமிழ்நாட்டின் நிலத்தடி நீரை கணக்கில் எடுத்திருக்கிறது. பெங்களூரு நகரத்தின் நீர் தேவையை பேசும் நீதிமன்றம், சென்னை மாநகரத்தின் நீர் தேவை குறித்து பேசவில்லை. அதனால், தீர்ப்பிலேயே எங்களுக்கு உடன்பாடு இல்லை என்கிறோம்.” என்கிறார்.

“நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிடுகிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதியே குற்றஞ்சாட்டி இருக்கிறார். இந்த குற்றச்சாட்டுடன் வந்திருக்கும் தீர்ப்பை ஒப்பிட்டுபார்த்தால், இது நிச்சயம் ஆளும் பா.ஜ.க அரசின் அழுத்தங்களால் வந்த தீர்ப்பு என்பது சாதாரணமாக புரியும்” என்கிறார் திருமுருகன்.

விவசாயிகளின், காவிரியை நம்பி இருக்கும் மக்களின் வாழ்வை காக்க வேண்டுமென்றால், போராட்டம் மட்டும் தீர்வு என நம்புகிறோம். அதனால்தான் வீதியில் இறங்கி இருக்கிறோம் என்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.

சட்டத்திற்கான போராட்டம்

இதே கருத்தைதான் வழிமொழிகிறார் காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்.

இது சட்ட விரோத போராட்டம் இல்லை. இது சட்டத்திற்கான போராட்டம் தான். அறத்தை நிலைநாட்ட கோரும் போரட்டம் என்கிறார் அவர்.

“பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனையில் தீர்ப்பு வழங்குகிறது. அதை மத்திய அரசு அமல்படுத்த தவறிவிட்டது என்று தமிழக அரசு வழக்கு தொடுக்கிறது. மத்திய அரசு மீது தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக எடுத்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு கோரிக்கை வைக்கிறது. காவிரி தீர்ப்பு வழங்கிய ஆயத்திலும் தீபக் மிஸ்ரா இருந்தார். நியாயமாக அவர் என்ன செய்திருக்க வேண்டும்? ஏன் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு மீது கோபம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர், நாங்கள் `ஸ்கீம்’ என்று குறிப்பிட்டு இருப்பது காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டும் குறிக்காது என்று விளக்கம் தருகிறார். சரி… குறைந்தபட்சம் அந்த ஸ்கீமையாவது ஏன் அமல்படுத்தவில்லை என்று கண்டித்தாரா? அதுவும் இல்லை. இப்படியான கையறு நிலையில் ஒரு இனம் என்ன செய்யுமோ… அதை தமிழகம் செய்கிறது. இந்தியா தமிழகத்தை வஞ்சித்துவிட்டது என்று ஒவ்வொரு தமிழனும் நம்புகிறான். அதனால்தான், அவன் வீதியில் போராட இறங்கிவிட்டான்” என்கிறார் பெ. மணியரசன்.

‘பி்ரித்தாளும் சூழ்ச்சி’

வேண்டுமென்றே மக்களை தூண்டிவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது மத்திய அரசு என்கிறார் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்.

தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் என்று எண்ணும் போது அவர்கள் வீதிக்கு வந்து போராடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், அதற்காக சில விளிம்புநிலை குழுக்கள் தேசிய கொடியை எரிப்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் அவர்.

மேலும் அவர், “காங்கிரஸ் இதனை செய்திருக்கலாமே என்கிறார்கள் அவர்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுவிட்டோம். இப்போது இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்தியில் ஆளும் அரசுதான்” என்கிறார் நாராயணன்.

‘சுயநலம், தவறான முன்னுதாரணம்’

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்றால், ஸ்டாலின் மீதுதான் தொடர வேண்டும். நீதிமன்றம் சொல்லிய பிறகும் இவ்வாறாக போராட்டம் நடத்துவது எப்படி சரியாக இருக்கும்?” என்கிறார்.

மேலும் அவர், “காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஆறாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து ஏன் திமுக பேச மறுக்கிறது. ஆட்சியில் இருந்தபோது இப்பிரச்சனையை சரியாக அணுகாமல், தீர்க்காமல் விட்டுவிட்டு, இப்போதுள்ள அரசு அதற்கு நிரந்திர தீர்வு காண முயற்சிக்கும்போது, நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இவ்வாறு செய்வது மக்களை ஏமாற்றும் வேலை. இவர்களுக்கு உண்மையில் காவிரி பிரச்சனையில் தீர்வை எட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை, பா.ஜ.கவை எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இவர்கள் செயல்படுகிறார்கள். இது சுயநலமன்றி வேறல்ல.” என்கிறார்.

சுங்கசாவடிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசிய அவர், இது மிகவும் தவறான முன்னுதாரணம். அதுவும், தாக்குதல் மேற்கொண்டவர்களை கதாநாயகர்களை போல் சித்தரிப்பது மிகவும் தவறானது என்றார். -BBC_Tamil

TAGS: