ஒரு துணைவேந்தராக இருக்கக் கூட தமிழர்களுக்கு தகுதி இல்லையா.. ஆளுநர் இப்படிச் செய்வது ஏன்?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த போது அவரை நேரில் அழைத்து விளக்கம் அளித்த ஆளுநர் அதே வேகத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தவரை நியமித்திருப்பது அதிர வைத்துள்ளது.

தமிழகத்தில் நேரடியாக அதிகாரத்தை பிடிக்க முடியாத பாஜக ஆளுநரை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆதிகத்தை செலுத்தி வருகிறது என்பது நீண்ட கால குற்றச்சாட்டு. ஆளுநரால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் அடுத்தடுத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அனுதாபிகளாகவும், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பதன் மூலம் பாஜகதான் இதைச் செய்கிறதோ என்ற தோற்றம் வலுப்பெற்று வருகிறது.

காங்கிரஸை காலி செய்த பிறகு திராவிடக் கட்சிகளை மட்டுமே ஆட்சியில் அமர்த்தி வரும் தமிழகத்தில் காவிக்கொடியை பறக்க விட பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது பாஜக. ஆனால் அரசியல் ரீதியில் பாஜகவின் இந்த முயற்சி தேறவில்லை. அதிமுகவை வைத்து செய்ய நினைத்த காரியங்களும் கைகூடவில்லை, புதிதாக கட்சி தொடங்க வைத்து நடிகர் மூலம் வாக்குகளை பெறலாம் என்ற எண்ணமும் ஈடேறாமல் இருக்கிறது (நடிகர் காலெடுத்து வைக்கவே பயந்து கிடக்கிறார் என்று கேள்வி)

பாஜகவினருக்கு வாய்ப்பு

இதனால் உயர்கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்களாக பாஜக ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு தமிழகத்தை சேர்ந்த புஷ்பவனம் குப்புசாமி விண்ணப்பித்திருந்தார், ஆனால் தமிழகத்தை சேர்ந்த அவருக்கு முன்னுரிமை அளிக்காமல் கேரளாவைச் சேர்ந்த பிரமீளா குருமூர்த்தி என்பவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

கேரளாவைச் சேர்ந்த பிரமீளா

புஷ்பவனம் குப்புசாமி தமிழிசையில் முனைவர் பட்டமும், இசை குறித்து 5 நூல்களும் எழுதியுள்ளார், கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.ஆனால் அவருக்கு துணைவேந்தர் பதவி கொடுக்காமல் முனைவர் பட்டம் பெறாத “கதாகாலட்சேபத்தில்” சிறந்தவர் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் பிரமீளா துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டப்பல்கலை து.வேந்தராக சாஸ்திரி

இதனைத் தொடர்ந்து கடந்த மாதத்தில் தமிழக சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சூரிய நாராயண சாஸ்திரியை நியமனம் செய்ததற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கி. வீரமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமிப்பதா என்றும் இவர்கள் கேள்வி எழுப்பினர்.

விளக்கம் சொன்ன ஆளுநர்

இதனையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலினை நேரில் அழைத்து துணைவேந்தர் நியமனம் குறித்து விளக்கம் அளித்தார். பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சாஸ்திரி துணை வேந்தராக நியமிக்கப்பட்டதாக அவர் கூறியதை ஏற்கவில்லை என்று பதிலளித்ததாக ஸ்டாலின் கூறி இருந்தார்.

அண்ணா பல்கலைக்கு கர்நாடகத்தவர்

இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் நியமித்துள்ளார். தமிழகம், கர்நாடகா இடையே காவிரி பிரச்னை பற்றி எரியும் இந்த சமயத்தில் சுமார் 2 ஆண்டுகளாக காலியாக இருந்த துணைவேந்தர் பதவிக்கு அவசர அவசரமாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரை துணைவேந்தராக நியமித்தது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

புறக்கணிக்கப்படும் தமிழர்கள்

தமிழகத்தில் இருந்து ஒருவரை துணைவேந்தராக நியமிக்காமல் வெளிமாநிலத்தவர்களுக்கே துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் முன்னுரிமை கொடுப்பது ஏன். திட்டமிட்டே உயர்கல்வி நிறுவனங்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த நியமனங்கள் செய்யப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகின்றன.

ஆளுநர் பொருட்படுத்துவதில்லை

ஆனால் இவற்றையெல்லாம் ஆளுநர் பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட போது எப்படி தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கவில்லையோ அதே போன்றே துணைவேந்தர் நியமனத்திலும் அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் கூறுவதை பொருட்படுத்தாமல் மத்திய அரசின் கட்டளைகளை சிறப்பாக செய்து வருகிறார் என்றே ஆளுநர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: