பிட்காயின் வர்த்தகத்துக்கு இந்தியாவில் தடை

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும் விற்கவும் தடை விதித்தது இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் வங்கி.

பிட்காயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

கிரிப்டோ கரன்சி பணப் பறிமாற்றத் தொடர்புகளை முடித்துக்கொள்ள வங்கிகளுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்னணுப் பணத்தை பயன்படுத்துவோர் சுமார் 50 லட்சம் பேர் இருப்பதாகத் தெரிகிறது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மின்னணுப் பணப் பறிமாற்ற மையங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.

“இந்த நடவடிக்கை எதிர்பாராமல் வந்துள்ளது. மூன்று மாதங்களுக்குப் பிறகு தங்கள் மின்னணுப் பணத்தை பணமாக மாற்ற முடியாது என்பதால், விரைவாக தங்கள் மின்னணுப் பணத்தை விற்க நினைக்கிறார்கள் மக்கள்,” என்று பிபிசியின் டவினா குப்தாவிடம் தெரிவித்தார் யுனிகாயின் நிறுவனத்தின் இணை நிறுவனர் சாத்விக் விஸ்வநாத்.

விலை வீழ்ச்சி

சராசரியாக ஒரு நாளில் விற்கப்படும் அளவைவிட தற்போது பிட்காயின்கள் விற்கப்படுவது 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தற்போது இயல்பாக இருந்திருக்க வேண்டிய விலை 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அதே நேரம், இந்திய பிட்காயின் முதலீட்டார்கள் இன்னமும் தங்கள் முதலீட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும், பிட்காயின் வணிகத்தை ரொக்கப் பணத்தின் மூலமோ, வெளிநாட்டு வங்கிக் கணக்கு மூலமோ நடத்த முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த தடை அறிவிப்புக்கு முன்பே, பிட்காயின் போன்ற மின்னணுப் பணத்தில் உள்ள இடர்ப்பாடுகள், ஆபத்துகள் குறித்து பல முறை எச்சரிக்கைகளை விடுத்தது இந்திய அரசு.

-BBC_Tamil

TAGS: