சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டம் முகிலன் குடியிருப்பு கடல் பகுதியில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கடல் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்திற்கும், மணக்குடிக்கு இடைப்பட்ட பகுதியில் மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
மூன்று முறை இடமாற்றம்
“துறைமுகம் கொணரும் செழிப்பு” எனும் முழக்கத்தோடு ‘சாகர்மாலா’ திட்டம் ஒன்றை இந்திய மத்திய அரசு நிறைவேற்ற முயன்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சரக்குப் பெட்டகத் துறைமுகம் ஒன்றை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சலில் கொண்டுவரப் போகிறோம் என்று தூத்துக்குடியில் அமைந்துள்ள வ. உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் அறிவித்தது.
பின்னர், அதனை இனையம் பகுதியில் கொண்டு வரப்போவதாக இடத்தை மாற்றி அறிவித்தது.
இனையத்தை சுற்றி வாழும் மீனவ மக்களும், ஏனையோரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன், திட்டத்திற்கான களப்பணிகளை நிறைவேற்ற முடியாமல் போகவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகின்ற இடத்தை மூன்றாம் முறையாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள்.
கோவளத்திற்கும் மணக்குடிக்கும் இடைப்பட்ட பகுதி
அதன்படி, கன்னியாகுமரிக்கு அடுத்தாக அமைந்துள்ள கோவளம், மணக்குடி இடையிலுள்ள பகுதியில் சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தினை அந்தப் பகுதில் கொண்டு வருவதற்கு மீனவர்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
போராட்டத்திற்கு முதலில் அனுமதி பின்னர் அனுமதி மறுப்பு
தங்களின் வாழ்வுரிமைகளை, வாழ்வாதரங்களை அழிக்கும் திட்டங்களைக் கைவிடுங்கள் என கேட்டு ஒவ்வொரு பகுதியிலும் மீனவர்களும், விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி வாங்கி இருந்த நிலையில், அதே நாள் பாஜகவினர் பந்த் போராட்டம் அறிவித்தனர்.
சட்ட ஒழுங்கு கருதி சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர்.
எனவே, நாகர்கோவிலில் நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
கடல் முற்றுகை போராட்டம்
இதனைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தின் 44 மீனவ கிராமங்களை சார்ந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வள்ளங்களில் செல்லும் மீனவர்களும், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மணக்குடி மற்றும் கோவளம் இடையிலான முகிலன் குடியிருப்பு பகுதி கடலில் 1,000க்கு மேற்பட்ட வள்ளங்களில் கறுப்பு கொடி கட்டி வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இப்பகுதி கடற்கரையில் மீனவர்களும், விவசாயிகளும் வாகனங்களில் வந்து, பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் கோட்டாறு மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டார். -BBC_Tamil