‘ரெயில்களை நடுவழியில் மறித்து போராட்டம்’

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ரயில்களை நடுவழியில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

அந்த நாளிதழ், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது. நேற்று காலை திருச்சி-தஞ்சை ரயில் வழித்தடத்தில் சோளகம்பட்டிக்கும், அய்யனாபுரத்துக்கும் இடையில் நடுவழியில் தண்டவாளத்தில் அமர்ந்த காவிரி உரிமை மீட்புக்குழுவினர் அந்த வழியாக திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த பாசஞ்சர் ரயிலை மறித்து போராடினர். இதேபோல் சிதம்பரத்தில், காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் ரயிலையும், சென்னையில் இருந்து திருச்சி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலையும் மறித்த 43 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நீரேற்று பாசன சங்க கூட்டமைப்பு சார்பில் ரயில் மறியலில் ஈடுபட்ட 170 பேரும், நாமக்கல் அருகே கீரம்பூரில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட 20 பேரும் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.” என்று விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

தினத்தந்தி

TAGS: