தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை உள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், கேஸ் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.குமரெட்டியாபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம் ஆகிய கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் தங்கள் கிராமங்களில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அ.குமரெட்டியாபுரத்தில் பொதுமக்களின் போராட்டம் இன்று 55-வது நாளாக நீடிக்கிறது. பொதுமக்கள் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோஷம் எழுப்பினார்கள். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் கலந்து கொண்டார்கள்.
நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு புதிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை என சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆலைக்கு எதிராக பல புகார்கள் நிலுவையில் உள்ளதால் முழு ஆய்வுக்கு பிறகே அனுமதி பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் போராட்டம் காரணமாக தூத்துக்குடி நகர் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை முன்பும், சிப்காட் வளாகத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-athirvu.com