ஹாங்காங்கில் தலைமறைவாகியுள்ள நிரவ் மோடியை கைது செய்ய சீன அரசு ஒப்புதல்..

பன்னாட்டு வைர நகை வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர்களும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகாரின்மீது சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இதில் நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்கள் இருவருமே கடந்த ஜனவரி மாதம் முதல்வாரம் இந்த வங்கி மோசடி அம்பலத்துக்கு வருவதற்கு முன்பாக நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டனர்.

அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ., இ-மெயில் அனுப்பியது. ஆனால் அவர்கள் விசாரணைக்கு வர முடியாது என கூறி விட்டனர். ஆனால் அவர்கள் எந்த நாட்டில் உள்ளனர் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் நிரவ் மோடி இப்போது ஹாங்காங்கில் இருப்பதை மத்திய அரசு கண்டுபிடித்தது. இதையடுத்து மும்பை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நிரவ் மோடி, சோக்சி ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. முறையிட்டது.

அதை ஏற்றுக்கொண்டு, கடந்த 8-ம் தேதி அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து அந்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதை சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனாவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஹாங்காங் அரசிடம் நிரவ் மோடியை கைது செய்ய கோரிக்கையை வைக்கப்பட்டது. ஹாங்காங் அரசுடன் இந்திய அரசு ஏற்கனவே குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. இருப்பினும் இதுதொடர்பாக சீனாவிடம் அனுமதி பெற வேண்டும். இப்போது நிரவ் மோடியை ஹாங்காங் கைது செய்ய சீன அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஹாங்காங் நடவடிக்கை எடுக்கலாம் என்று சீனா கூறியுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் சுவாங் கூறும்போது, `இரு நாட்டு ஒப்பந்தங்களின்படி, சட்ட விதிகளை பின்பற்றி, நிரவ் மோடியை கைது செய்ய, ஹாங்காங் உரிய நடவடிக்கை எடுக்கலாம்’ என்று கூறினார்.

‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டால் ‘இன்டர்போல்’ அமைப்பு, தனது 186 உறுப்பு நாடுகளுக்கு, சம்பந்தப்பட்ட இருவருக்கும் எதிராக கோர்ட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளதை கூறி, அவர்கள் எந்தவொரு நாட்டுக்கும் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தால் கைது செய்ய வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

-athirvu.com

TAGS: