சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலணிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி தொடங்கியது. போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பதட்டமான நிலை ஏற்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மைதானத்திற்கு வெளிப்பகுதியிலும், உள்பகுதியிலும் பாதுகாப்பை அதிகரித்தனர். இதற்கிடையே மைதானத்திற்கு உள்ளேயும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்திற்குள் ரசிகர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் விமர்சனத்திற்கு உள்ளானது, போராட்டத்திற்கு மாற்று வழிகள் தொடர்பான செய்திகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

பலத்த பாதுகாப்புக்கு இடையே போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மைதானத்திற்கு உள்ளே பார்வையாளர்கள் காலணிகளை வீசியது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பார்வையாளர்கள் பகுதியில் இருந்தவர்கள் மைதானத்தை நோக்கி காலணிகள், சட்டைகளை கழற்றி வீசி உள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் விசாரித்து 8 பேரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி ஐ.பி.எல். எதிர்ப்பாளர்கள் மைதானத்திற்குள் காலணிகளை வீசி எதிர்ப்பை தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-athirvu.com

TAGS: