பெங்களூருவில் கன்னட கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என கோஷமிட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை மதிக்காமல் தமிழக கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாவிட்டால் வருகிற 16-ந்தேதி முதல் தமிழக வாகனங்களை கர்நாடகாவுக்குள் நுழைய விடாமல் தடுப்போம். இந்த போராட்டத்தை தமிழக எல்லையில் கன்னட அமைப்புகள் நடத்தும்.
மே 3-ந்தேதி நீதிமன்றம் தெரிவிக்கும் உத்தரவை பொறுத்து முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-athirvu.com