சென்னை: சாது மிரண்டால் காடு கொள்ளாது – இதன் அர்த்தம் ஆளும் பாஜகவுக்கு இப்போது புரிந்திருக்கும். கடந்த ஒருமாத காலமாக காவிரி விவகாரத்தில் தமிழகம் கொதித்து போயுள்ளது என்பது பிரதமர் மோடிக்கு தெரியாதா? தெரிந்தும் தமிழகம் வர துணிந்ததன் காரணம்? வடக்கு வாழ தெற்கு எப்போதும்போல தேய்வதுதானே என்ற எண்ணம்தானே…. அதையும் மீறி சென்னை வந்து ஒரு வணக்கம் வைத்துவிட்டு, யாரோ எழுதி கொடுத்த தவறான ஒரு வரலாற்று செய்தியை படித்து காட்டிவிட்டு சென்று விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?
சொந்த நாட்டில்கூட ஒரு பாரத பிரதமரால் சுதந்திரமாக நடமாட முடியாமல் அவசர அவசரமாக ஹெலிகாப்டரிலேயே வந்து போக வேண்டிய கட்டாயம் என்ன? நாட்டின் பிரதமருக்கு பாதுகாப்பு வசதிகளை செய்துகொடுத்து சாலைவழியே கொண்டு சென்றிருக்கலாமே? ஏன்? பாதுகாப்பு அதிகாரிகளின் திராணியற்ற செயல்பாடா? இவ்வளவு வெறுப்பை தமிழகம் ஒரே நாளில் உமிழ என்ன காரணம்? யார் காரணம்? காரணமும்-காரணகர்த்தாவும், ஆதியும்-அந்தமும், நதிமூலமும்-ரிஷிமூலமும் எல்லாமே சாட்சாத் அவர்கள்தான். தமிழகம் அனல் கக்கியதை இன்றாவது உணர முடிந்ததா? ஒவ்வொரு விவசாயியின் வயிற்றெரிச்சல்கள், இறக்கும் தருவாயில் விவசாயிகளின் இறுதி முனகல்கள், இளம் விவசாயியை இழந்த பெண்களின் ஒப்பாரிகள், இந்த நொடியே ஏதாவது ஒரு வகையில் தண்ணீர் கிடைத்து விடாதா என ஏங்கும் விவசாயியின் கூக்குரல்கள்…. ஏழைகளின் நெஞ்சு பொருமலின் அனல் காற்றுகள்…
இப்போதாவது உங்களுக்கு கேட்கிறதா? கோடிக்கணக்கான உயிர்களை கொன்ற ஹிட்லரைவிட, பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்ற ராஜபக்ஷேவைவிட பிரதமரை வெறுக்கும் அளவுக்கு ஆளாகிவிட்டதற்கு காரணம் நீங்கள் தமிழர்களை நடத்திய விதமே. மக்களாட்சியில் உட்கார்ந்துகொண்டு சர்வாதிகார ஆட்சி செய்தால் உணர்வுள்ள யாராலும் சும்மா இருக்க முடியாது. அதிலும் தண்ணீர் கிடைக்காத ஆதங்கமும்-அங்கலாய்ப்பும் மக்களின் தூக்கத்தை கெடுத்து வெகுநாளாகிவிட்டது.
அப்படி என்ன கேட்டுவிட்டார்கள் மக்கள். தண்ணீர்தானே. தண்ணீர் தண்ணீர் என கதறி வேண்டுவதுகூடவா உங்கள் செவிகளுக்கு வந்து சேரவில்லை? நீரின்றி நாங்கள் செத்து மடிவதுகூடவா உங்கள் கண்களுக்கு தெரியவில்லை? இப்படி கண்ணை மூடிக் கொண்டு பாராமுகமாக இருந்தால் நாங்கள் எங்கே போய் முட்டிக் கொள்வது? இருக்கும் அதிகாரத்தை, பதவி, பண பலத்தை வைத்துக்கொண்டு, கர்நாடக அரசிடம் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துங்கள் என்ற ஒற்றைவார்த்தை சொல்லியிருந்தால் நீங்கள் 4 வருடமாக எங்களுக்கு செய்த அனைத்து ‘புண்ணிய” காரியங்களையும் மறந்து உங்களை தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்களே?
மிஸ்டு கால் கொடுத்து நதிகளை இணைக்க முயற்சி செய்வோம் என்று கூறியவர்களாவது இந்த ஆலோசனையை உங்களிடம் எடுத்து சொன்னார்களா? அதுவும் இல்லையே. அவர்களின் பேச்சு மூச்சைக் கூட இப்போது காணோம். தமிழர்கள் மீது பல்வேறு அம்புகளை 4 வருட காலமாக எய்துவந்தீர்களே… எய்யப்பட்ட அம்பிலிருரந்து ரத்தம் சொட்ட சொட்ட இதுநாள் வரை கிடந்தோமே. இன்று பொறுக்க முடியாத வலியால் அம்புகளனைத்தையும் பிடுங்கி திருப்பி எரிந்திருக்கிறோம். அவ்வளவுதான். துளைத்தெடுத்த அம்புகளின் வலிகளை இன்றாவது உணரமுடிகிறதா?
உணர்வாகட்டும், உணவாகட்டும்… எங்கு கை வைக்கிறோம், யார் மீது கை வைக்கிறோம், எதில் கை வைக்கிறோம் என்பதை இனி தொடங்கும் முன்பே உணர தொடங்குங்கள். ட்ட குட்ட குனிந்தவன்தான், இன்று கருப்பு நடவடிக்கைகள் மூலம் உலகையே உங்களை திரும்பி பார்க்க வைத்துவிட்டான்.
தமிழகத்தின் வறட்சியையும் இயலாமையையும் வைத்து எவ்வளவு நாளைக்கு தண்ணீர் அரசியல் செய்யலாம் என நினைப்பீர்கள்? எத்தனை வருடங்களுக்கு எங்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அதில் குளிர்காய நினைப்பீர்கள்? இன்று கன்னட மக்களும், தமிழக மக்களும் ஒன்று சேர்ந்துவருகிறார்கள். நாளை இவர்கள் கை கோர்த்து நின்றால் எதைவைத்து அரசியல் செய்வீர்கள்?
மக்களின் மனங்கள் இணைந்துவிட்டபிறகு ஆட்சியாளர்கள் எதற்கு, ஆட்சிமுறைகள் எதற்கு? உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று வந்த பாரத பிரதமர்… சிவப்பு கம்பள வரவேற்புடன் அரசாங்க செலவில் பயணம் மேற்கொண்டவர்… பரந்து விரிந்த பூமியின் பல நாடுகளை சர்வ சாதாரணமாக கடந்து வந்தவர்… இவ்வளவு ஏன்? பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது என சொல்லக்கூடிய காஷ்மீருக்கும், பாகிஸ்தானுக்குமே எவ்வித பிரச்சினை-விவகாரம் இல்லாமல் அமைதியாக சென்றுவந்தவர்… இன்று சொந்த நாட்டில் அதுவும் ஆளும் நாட்டில், அதுவும் கடைகோடி மாநிலமான தமிழகத்தில் சுதந்திரமாக ஒரு நாட்டின் பிரதமர் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்றால் இதைவிட அவமானம் என்ன இருக்கிறது?
எழுந்து நில் இந்தியா, இந்தியா ஒளிர்கிறது, தூய்மை இந்தியா இதெல்லாம் உங்களால் பரிந்துரைக்கப்பட்ட, நீங்கள் அமலுக்கு கொண்டு வந்த வாசகங்கள்தான். மறுப்பதற்கில்லை. இப்போது அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது “கோ பேக் மோடி” என்ற வாசகம். இந்த ஹேஷ்டாக் உலக அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்துள்ளதாம். உலக தலைவர்கள் அத்தனை பேரின் கவனத்துக்கும், காதுகளுக்கும் இது எப்போதோ போய்ச்சேர்ந்திருக்கும்.
நாடு-நாடாக, கண்டம்-கண்டமாக இனி எப்படி பயணிக்க முடியும்? முதலிடத்தை பெற்றுவிட்ட பிறகு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும்? அப்படியே கிடைத்தாலும் அது மனப்பூர்வமானதாகவும், உண்மையானதாகவும் இருக்குமா? மக்கள் என்றால் யார்? ஜனநாயகம் என்றால் என்ன? வறுமைகோடு, கீழ்த்தட்டு பிரச்சினைகள் இவையெல்லாம் என்ன என்று தெரிந்துகொண்டால் நல்லது. இல்லையேல் மற்றுமொரு இதுபோன்ற துர்நிகழ்வை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கனவே செல்வ செழிப்புடன் வலம்வந்த பாரதமாதாவை, ஸ்டெர்லைட், மீத்தேன் என பன்னாட்டு வியாபாரிகளை அனுப்பி அவளை சுரண்டி அமங்கலியாக்கிவிட்டீர்கள், இதில், குடிக்க தண்ணீரும் இல்லாமல் செய்து அவளது மூச்சை ஒரேயடியாக நிறுத்தி விட வேண்டாம்.