சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்: மேனகா காந்தி

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: “சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது. 12 வயதுக்கும் குறைவான சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். தற்போதுள்ள போஸ்கோ சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்க முடியும். மரண தண்டனை விதிக்க முடியாது.

எனவே, இதில் சட்டதிருத்தம் கோரி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யவுள்ளது. உத்தரபிரதேசத்தில் மைனர் பெண் பலாத்கார வழக்கில் யாரும் தப்ப முடியாது. எம்எல்ஏ போன்ற செல்வாக்கு மிக்க நபராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியது. இதில் மத்திய அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: