இந்தியாவில் சாதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்! – தலாய் லாமா வேண்டுகோள்

இந்தியாவில் இருந்து சாதிமுறை முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் என தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தமதத் துறவியும், நோபல் பரிசு வென்றவருமான தலாய் லாமா, இமாச்சல் பிரதேசம் மாநிலம் தரம்சாலா பகுதியில் உள்ள ஷுகல்காங் புத்த கோவிலில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் இந்தியாவின் மதநல்லிணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமிக்கது; அது அனைத்து மதங்களுக்கும் மரியாதை தரக்கூடியது என பேசியிருந்தார்.

‘உலகின் மிகப்பெரிய மதப் பாரம்பரியங்களுக்கு எல்லாம் இந்தியாதான் வீடு. அந்த மதங்களை நம்பாதவர்களுக்கும் அங்கு மரியாதை உண்டு. அது மிகவும் அற்புதமானது மற்றும் பெருமைப்பட வேண்டிய விஷயம்’ என தலாய்லாமா தெரிவித்தார். மேலும், ‘உள்ளார்ந்த அமைதிதான் தன்னம்பிக்கைக்கான அடித்தளம். எனவே, பள்ளிகளில் குழந்தைகளுக்கு அந்த உள்ளார்ந்த அமைதி குறித்தும், மதநல்லிணக்கத்தின் வாயிலாக அறநெறிக் கோட்பாடுகளையும் கற்றுத்தரவேண்டும். அதற்கு மாறாக கற்றுத்தரப்படும் சுயத்தை மையம் கொள்ளும் அணுகுமுறைகளைக் கட்டுப்படுத்தி, சாதி முறைகளை இந்தியாவில் இருந்து முழுவதுமாக ஒழிக்கவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் சாதிய, மத ரீதியிலான ஒடுக்குமுறைகள் அதிகரித்து வரும் சூழலில், மதநல்லிணக்கம் மற்றும் சாதி ஒழிப்பு குறித்த தலாய் லாமாவின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

-nakkheeran.in

TAGS: