லண்டன்: லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழ் மக்கள் மோடியே திரும்பி செல்லுங்கள் என்ற முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுபெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வந்தார்.
காவிரி வாரியம் அமைக்காமல் தமிழகத்தை மோடி வஞ்சிப்பதாக சென்னை விமான நிலையத்தை தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இணைந்து முற்றுகையிட்டன. பின்னர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு உடை அணிந்தும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் எதிர்ப்பை காட்டினர்.
பயண திட்டம் மாற்றம்
இதையடுத்து மோடியே திரும்பி செல்லுங்கள் #GoBackModi என்ற முழக்கங்களை எழுப்பினர். உலக அளவில் இந்த ஹேஷ்டேக் பிரபலமடைந்தது. கருப்பு பலூன்கள் பறக்கவிட்டதால் மோடியின் விமான பயணத்திட்டமே மாற்றப்படும் அளவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
லண்டன் பயணம்
இந்நிலையில் ஸ்வீடன் சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் மோடி பிரிட்டன் சென்றார். லண்டன் விமான நிலையத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டார்.
போராட்டம்
பின்னர் பிரிட்டன் பிரதமர் தெரசா மேவையும் சந்தித்து பேசினார். இந்நிலையில் லண்டனில் வாழும் தமிழர்கள் மோடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரில் சிறுமி கொலை, காவிரி வாரியம் அமைக்காதது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக லண்டனில் போராடி வருகின்றனர்.
பரபரப்பு
இந்த போராட்டத்தின் போது அவர்கள் மோடிக்கு எதிராக #GoBackModi என்ற வாசகத்தை பதாகைகளில் ஏந்தி இருந்தனர். சென்னையை போல் இந்த போராட்டமும் தீவிரமாக இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.