சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

டெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் போக்ஸோ சட்டத்தில் செய்யப்பட்ட அவசர சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் 7 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஒத்த சம்பவம நாடு முழுக்க பிரச்னையை ஏற்படுத்தியது. அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் 14 வயது சிறுமியை பாஜக எம்எல்ஏ வன்புணர்வு செய்த விஷயமும் பெரிய பிரச்சனை ஆனது.

இதையடுத்து, சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உடனடியாக சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்து இருந்தது. இதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்ட திருத்தம் நேற்று குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. தற்போது மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து உடனடியாக சட்டம் அமலுக்கு வருகிறது.

tamil.oneindia.com

TAGS: