டெல்லி: இந்திய பிரதமர் மோடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து அமைதியா இருப்பதை கண்டித்து, அவருக்கு 637 உலக புகழ்பெற்ற கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். கொஞ்சம் பேசுங்கள் என்று, கோபமாக அந்த கடிதத்தில் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
இந்தியாவில் தற்போது அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் அதிகரித்து வருகிறது. பெண்கள் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதேபோல் சிறுபான்மையின மக்களும் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதிலெல்லாம் பாஜக கட்சியினரும் எதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்கிறார்கள். இதற்கு எதிராக மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மோடி பேசவில்லை
தொடர்ந்து இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக பிரதமர் மோடி எதுவுமே பேசாமல் இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியின் போது, டெல்லியில் நடந்த ஒரு பாலியல் குற்றத்தை வைத்து, அரசையே கவிழ்க்க செய்த மோடி, அவர் ஆட்சியில் தினமும் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசாமல் இருக்கிறார். முக்கியமாக பாஜக கட்சியினர் செய்யும் குற்றங்கள் பற்றி வாய் திறப்பதில்லை.
திட்டி கடிதம்
மோடியின் இந்த செயல்பாட்டை கண்டித்து அவருக்கு மாணவர்கள் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அனுப்பியது இந்திய மாணவர்கள் மட்டும் இல்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயம். மொத்தம் 637 கல்லூரிகளில் இருந்து மோடிக்கு இப்படி கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 200 க்கும் அதிகமான கடிதங்கள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டனில் படிக்கும் இந்திய மாணவர்களுடையது. 5000க்கும் அதிகமான மாணவர்கள் இதில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.
கடிதத்தில் என்ன இருக்கிறது
அந்த கடிதத்தில் ”நீங்கள் பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த விஷயத்திற்கும் குரல் கொடுப்பதில்லை. முக்கியமாக உங்கள் கட்சியினர் செய்யும் குற்றம் பற்றி எதுவும் பேசுவதில்லை. நீங்கள் கடைசியாக காஷ்மீர் சம்பவத்தை கண்டித்தது கூட மயில் இறகால் சீவிவிட்டது போல மென்மையாக இருந்தது. நீங்கள் இப்படி அமைதியாக செயலற்று இருப்பது நம்முடைய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன் கடிதம்
இது இந்த வாரத்தில் நடக்கு இரண்டாவது சம்பவம் ஆகும். இரண்டு நாட்களுக்கு முன்பு மோடிக்கு இதேபோல் இன்னொரு கடிதமும் அனுப்பப்பட்டது. முன்னாள் இராணுவ வீரர்கள், போலீஸ்கள், அரசு அதிகாரிகள் சிலர் அந்த கடிதத்தை அனுப்பி இருந்தனர். அதில், சில முக்கியமான வழக்குகளில், விசாரணை அதிகாரிக்கு சரியான சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை, பாலியல் குற்றவாளிகள் எளிதாக தப்பித்து விடுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்து இருந்தனர்.