காவிரியை விட மெரினா தான் முக்கியமா?… அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் போராட அனுமதி அளிக்க முடியாது என்று அரசு உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறிய நிலையில் காவிரியை விட மெரினா தான் அரசுக்கு முக்கியமா என்று ஹைகோர்ட் நீதிபதி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று தென்இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ராஜா முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.

அப்போது தமிழக அரசுக்கு நீதிபதி ராஜா அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருந்தார். கடைசியாக எப்போது மெரினாவில் போராட அனுமதி அளிக்கப்பட்டது, ஏன் அரசு போராட்டத்திற்கு அனுமதி மறுக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டே ஆஜராகி கடைசியாக 2013ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குத் தான் மெரினாவில் அனுமதி அளிக்கப்பட்டது, அதற்குப் பின்னர் எந்த போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

சென்னையை பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டத்திற்கு அனுமதியளிக்க முடியும், மெரினாவில் நிச்சயம் போராட அனுமதிக்க முடியாது என்று அரசு தரப்பு வக்கீல் திட்டவட்டமாகக் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி ராஜா, காவிரியைவிட மெரினா கடற்கரை மிகவும் முக்கியமா என்று அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி வைகுண்டஏகாதேசி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது லட்சக்கணக்கான மக்கள் கோயில், தேவாலயங்களில் கூடுவார்கள் அந்தப் பண்டிகைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று பண்டிகை கொண்டாடக் கூடாது என்று உத்தரவிடுவீர்களா என்று நீதிபதி கேட்டுள்ளார். மக்களின் போராட்டத்தை தடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை, போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அனுமிதி உள்ளது என்று கூறி வழக்கின் தீர்ப்பை நீதிபதி நாளை ஒத்திவைத்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: