தீர்ப்பைக் கேட்டதும் நிம்மதி இழந்து, பயந்துபோன ஆசாராம் பாபு!

16 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், ஜோத்பூர் எஸ்.இ/எஸ்.டி சிறப்பு நீதிமன்றம், சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவைக் குற்றவாளி என அறிவித்தது. மேலும், அவருக்கு ஆயுள் தண்டனையும், அவருக்கு உதவியாக இருந்த ஹிப்ளி மற்றும் சரத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், தீர்ப்பளிக்கப்பட்ட அந்த தருணத்தில் ஆசாராம் பாபு எந்த நிலையில் இருந்தார் என ஜெயில் கண்காணிப்பாளர் விக்ரம் சிங் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘நீதிபதி மதுசூதனன் சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளி என அறிவித்து, தண்டனை விவரத்தை பிறகு அறிவிக்கலாம் எனக் கூறிய நிலையில், தனது வழக்கறிஞர்களை ‘ஏதாவது செய்யுங்கள்’ என கேட்டுக்கொண்டே இருந்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த நேரமும் அவர் நிம்மதியற்ற நிலையிலேயே இருந்தார். நீதிபதி தன்னை குற்றவாளி என அறிவித்தபோது அவர் நொறுங்கிப் போயிருந்தார். மேல் கோர்ட்டில் இந்த வழக்குகளை எதிர்கொள்வேன் என சவால் செய்துவிட்டு, தனது அறையில் எதையோ நினைத்துக்கொண்டு சோகமாக அங்குமிங்கும் நடந்துகொண்டே இருந்தார்’ என தெரிவித்துள்ளார்.

சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கிறது. கூடிய விரைவில் அதை காந்திநகர் நீதிமன்றம் வழங்கயிருக்கிறது. சாமான்யர்களுக்கும் சட்டம் கைகொடுக்கும் என்பதை ஜோத்பூர் வழக்கு நேற்று நிரூபித்தது. அதேபோல், சூரத் சிறுமிகள் வழக்கும் நீதியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-nakkheeran.in

TAGS: