கூடலூர் தேவாலாவில் அணை கட்டாவிட்டால் மெரினாவில் சாகும்வரை உண்ணாவிரதம்: அய்யாக்கண்ணு

ஊட்டி: கூடலூர் தேவாலாவில் ஜுன் 9-க்குள் தமிழக அரசு அணை கட்டாவிட்டால் மெரினாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேற்று ஊட்டி வந்திருந்தார். அப்போது ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்வது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அதுகுறித்த துண்டு பிரசுரங்களை ஆட்டோ ஓட்டுனநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அய்யாக்கண்ணு டெல்லியில் நடத்திய போராட்டத்துக்காக பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

பின்னர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

உச்சநீதிமன்ற உத்தரவின் படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையும் கிடைப்பது இல்லை. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலை உள்ளது. இந்த நிலை இருந்தால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்தால் ஆண்மை குறைவும், பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 25 லட்சம் நோட்டீஸ்கள் அச்சடிக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கட்டிடங்கள் அதிகமாக கட்டப்பட்டு வருவதால், மலைகளின் அரசி என்ற பெயரை இழந்து விடும். எனவே, தேயிலை விவசாயத்தை பாதுகாத்து, மலைகளின் அரசி என்ற பெயரையும் பாதுகாக்க வேண்டும்.

கூடலூர் தேவாலா பகுதியில் ஆண்டுக்கு 4 ஆயிரம் மில்லி மீட்டர் முதல் 7 ஆயிரம் மில்லி மீட்டர் வரை மழை பதிவாகிறது. இந்தியாவிலேயே இரண்டாவது சிரபுஞ்சி என்று தேவாலா அழைக்கப்படுகிறது. அதிகமாக பெய்யும் மழைநீர் வீணாக ஓடி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு செல்கிறது.

அந்த தண்ணீரை முழுமையாக திருப்பி தேவாலா பகுதியில் மேற்கு மண்டலமான நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தேவாலா பகுதியில் அணை கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேற்கு மண்டலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்ற நிலையே வராது. தேவாலா பகுதியில் அணை கட்டுவது குறித்து வருகிற ஜூன் 9-ந் தேதிக்குள் தமிழக அரசு அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்றால், சென்னை மெரினா கடற்கரையில் ஜூன் 10-ந் தேதி முதல் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை புதிய செயல்வடிவத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வேண்டும்.

ஆனைமலை ஆறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றினால் மேற்கு மண்டலத்தில் 10 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். கர்நாடக தேர்தலுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.

அடுத்த மாதம் 3-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் புரட்சியாக வெடிக்கும்.

விவசாயிகள் மனதில் எழும் தற்கொலை எண்ணத்தை மாற்றி வருகிறோம். இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார். இதையடுத்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

tamil.oneindia.com

TAGS: