கொங்கு மண்டலத்தை செழிக்கச் செய்த நொய்யல் ஆற்றின் அவல நிலை

ஜீவநதிகள் எதுவும் இல்லாத கொங்கு மண்டலத்தில் விவசாயத்தை வளர்த்து, நிலத்தடி நீரை பெருகச்செய்த நொய்யல் நதி பல்வேறு ஆக்கிரமிப்புகளால் அழிவின் விளிம்பில் உள்ளது. அரசு நிர்வாகத்தின் அலட்சியமும், மக்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளுமே ஒரு நதியின் அழிவுக்குக் காரணமாகி விட்டதாக இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கொங்கு நாட்டின் அடையாளம்

மனிதகுலம் ஓரிடத்தில் நிலைத்து நின்று நாகரீகம் வளர முக்கிய காரணமாக இருந்தவை நதிகளே. உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் முக்கிய அடையாளமாக அங்கு பாயும் நதி விளங்குகிறது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும், அங்கு விவசாயம் வளமாக அமையக் காரணமாகவும் இருந்தது நொய்யல் நதி.

கோவை மாவட்டத்தில், வளமான பல்லுயிர்ச் சூழல் நிலவும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சாடிவயல் என்ற பகுதியில் சிற்றோடைகள் இணைந்து நொய்யல் ஆறு உருவெடுக்கிறது. சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி கோவை, சூலூர், பல்லடம், மங்கலம், திருப்பூர், ஈரோடு – ஒரத்துப்பாளையம் அணை என 180 கிலோ மீட்டர் பயணித்து கரூர் அருகே நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.

நொய்யலில் நீர் மேலாண்மை வகுத்த சோழர்கள்

மழைக் காலங்களில் மட்டுமே பெருக்கெடுக்கும் நொய்யல் ஆற்றின் நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் விதமான நீர் மேலாண்மைத் திட்டத்தை 800 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்டலத்தை ஆண்ட சோழர்கள் உருவாக்கி வைத்தனர். நொய்யலை ஆதராமாகக் கொண்டு 32 அணைக்கட்டுகளும், 40 க்கும் மேற்பட்ட குளங்களும் கட்டமைக்கப்பட்டன.

மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் நீரானது முழுவதும் வீணாகாமல் இடை இடையே தடுக்கப்பட்டு அணைக்கட்டுகளிலும் அதன் வழியாக குளங்களிலும் சேமிக்கப்பட்டது. அணைக்கட்டுகளில் இருந்து ஒரு சங்கிலித் தொடர் போன்ற ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி நொய்யல் நதிக் கரையோர மக்கள் மட்டுமல்லாது நதிக்கு தொலைவில் இருந்த மக்களும் விளை நிலங்களும் பயனடையும் விதத்தில் நீர் மேலாண்மை திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

இதன் மூலமாக குடிநீர், பாசனம், நிலத்தடிநீர் போன்ற பயன்களை மக்கள் அடைந்தனர். பின்னர் நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்த ஆங்கிலேய அரசும் சோழர்கள் கட்டமைத்த நீர் மேலான்மைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருந்தனர்.

கொங்கு

ஆக்கிரமிப்பு அவலம்

மூன்று மாவட்டங்கள் வழியாக 180 கிலோ மீட்டர் தூரம் எந்த தடையும் இன்றி ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி தற்போது பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளால் கோவையின் எல்லையை கடக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அடுத்ததாக பின்னலாடை நிறுவனங்களுக்கு பிரசித்தி பெற்ற திருப்பூரில் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளின் கழிவுகள் நொய்யலில் நேரடியாக கலந்து மாசு படுத்துகிறது. சாக்கடை கழிவுகளும், ரசாயனக்கழிவுகளும் அதிகம் கலப்பதால் ஆற்று நீர் மாசடைந்து நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. மனிதர்களுக்கும், மண்ணிற்கும் பயன்படாத ஆறாக மாறியதால் நொய்யலை இறந்த ஆறு என்றே கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

திடக்கழிவுகள் அதிகம் கொட்டப்பட்டு, புதர்கள் சீரமைக்கப்படாததால் ஆற்றின் வழித்தடங்கள் மறைந்து நீர் செல்ல தடை எற்பட்டுள்ளது. சாக்கடையும், சாயக் கழிவும் அதிகம் கலந்த நொய்யல் நீர் அணைக்கட்டுகளில் தேங்கி விவசாய நிலங்களையும் நிலத்தடி நீரையும் பாழாக்கியது. இந்த பிரச்சனையை விவசாயிகள் உச்சநீதிமன்றம் வரை எடுத்து சென்று சுத்திகரிக்கப்பட்ட நீரைமட்டுமே ஆற்றில் கலக்க வேண்டும் என்ற உத்தரவை பெற்றனர். போராட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரும் சாயப்பட்டறைகள் சாயக்கழிவை ஆற்றில் கலந்துகொண்டுதான் இருக்கின்றன.

கொங்கு

அரசு செய்ய வேண்டியது

பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் அழிவின் விளிம்பிற்கு சென்ற நொய்யலை மீட்டெடுக்க கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட இயற்கை ஆர்வலர்கள், விவசாய அமைப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அரசின் உதவியின்றி ஆற்றை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்பது அவர்கள் கருத்து. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நகரப் பகுதிகளின் சாக்கடை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும், ஆலைகளில் இருந்து நேரடியாக கலக்கும் ரசாயானக் கழிவுகளை தடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் நொய்யல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை கட்டமைப்புகளை சீரமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் அதிகமாகி நொய்யல் மீண்டும் உயிர் பெறும். நூற்றாண்டுகளாக அண்டை மாநிலங்களோடு தண்ணீருக்காக பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இருக்கும் நீராதாரங்களை முறைப்படுத்த வேண்டும் என்பது உலக தண்ணீர் தினத்தை கடைபிடிக்கும் இந்த வேளையில் அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்றாக உள்ளது. -BBC_Tamil

TAGS: