அந்த ஒற்றை அறை மட்டுமே கொண்ட அந்த வீடு யாரும் வசிக்காமல் விடப்பட்டது போல உள்ளது. ஆனால், அங்கு ஒரு இளம் தம்பதிகள் வசிக்கின்றனர். அவர்களுக்கு சமீபத்தில்தான் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கிழக்கு மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியின் கோண்டு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 26 வயதாகும் சுக்தேவ் வத்தே மற்றும் அவரது மனைவி நந்தா ஆகியோர்தான் அந்தத் தம்பதி. நந்தா சத்திஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியைச் சேர்ந்தவர். அவர் முரியா பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்.
2014இல் அவர்கள் இருவரின் பெற்றோரது சம்மதத்துக்குப் பிறகு 2015இல் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இதுவும் ஒரு கலப்பு மனம் போலதான்.
மத்திய இந்தியாவின் அடர்ந்த தண்டகாருண்ய காட்டுப் பகுதிகளில் ஒரு காலத்தில் துப்பாக்கிகளுடன் திரிந்தவர்கள் இவர்கள். இன்றைய இந்தியாவின் பதற்றம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் அப்பகுதியில் அவர்கள் காவல் படையினருடன் சண்டையிட்டவர்கள்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவின் மிகப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறிய, தடை செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பின் கொரில்லா படையில் சுக்தேவ் மற்றும் நந்தா ஆகியோர் பங்காற்றியவர்கள்.
சுக்தேவ் மற்றும் நந்தா அங்குதான் காதல் வயப்பட்டார்கள். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்தார்கள். ஆயுதப் போராட்டம் தங்களை எங்கும் இட்டுச்செல்லவில்லை என்று நினைத்தார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு குடும்பத்தைக் கட்டமைக்க விரும்பினார்கள்.
சுக்தேவ் மற்றும் நந்தா மட்டுமே ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டவர்கள் அல்ல. கட்சிரோலியில் மட்டும் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு தற்போது ஒரு சாமானிய வாழ்க்கையை வாழும் சுமார் 150 தம்பதிகள் உள்ளனர்.
‘மாவோயிஸ்டுகள் தங்கள் ஆதரவை இழந்து வருகின்றனர்’
ஆந்திர மற்றும் சத்திஸ்கர் மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிழக்கு மகாராஷ்டிராவின் வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில், கடந்த மூன்று தசாப்தங்களாக மாவோயிஸ்டுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். தற்போது நிலைமை மெல்ல மெல்ல மாறி வருகிறது.
மாற்றங்களுக்கிடையில் கட்சிரோலி பகுதியில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு குறைந்து வருகிறது.
கடந்த ஞாயிறு மற்றும் திங்களன்று சி-60 கமாண்டோ படையினர் நடத்திய இரு வேறு தாக்குதல்களில், உயர்மட்ட பொறுப்புகளில் இருந்த இருந்த இருவர் உள்பட, 37 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
கசன்சூர் கிராமம் அருகே உள்ள போரியா வனப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு ஒன்பது பெண் போராளிகள் உள்பட 16 மாவோயிஸ்டுகளின் உடல்கள் ஞாயிறன்று கைப்பற்றப்பட்டன. இப்பகுதி மகாராஷ்டிரா – சத்திஸ்கர்ட எல்லையில் அமைந்துள்ளது.
அங்கிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஜிம்லட்டா பகுதியில் திங்களன்று நடந்த தாக்குதலில் ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக நக்சல் எதிர்ப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயன்று இந்திராவதி நதியில் மாவோயிஸ்டுகள் என்று சந்திக்கப்படும் 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆக மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 37. குறைந்த கால இடைவெளியில் இவ்வளவு அதிகமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது இப்போதுதான்.
கட்சிரோலி மாவட்டத்தின் பம்ராகார்க் வட்டத்தில் கடந்த வாரம் காவல் படையினரால் தேடல் நடவடிக்கைகள் அதிகரித்திருந்தன. அப்பகுதி மாவோயிஸ்டுகளின் கோட்டையாக விளங்கியது.
மாவோயிஸ்டுகளுக்கு பலத்த அடி
வெறும் இரண்டு நாட்கள் இடைவெளியில் மாவோயிஸ்டுகள் இத்தனை உறுப்பினர்களை இழந்ததில்லை. கட்சிரோலி மாவட்டத்தில் மட்டும் 2013 முதல் 2017 வரை 76 மாவோயிஸ்டுகள் நக்சல் எதிர்ப்பு கொல்லப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக 2013இல் 27 பேர் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டு 200 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். அதே காலகட்டத்தில் மாவோயிஸ்டுகளால் 25 காவல் படையினரும் கொல்லப்பட்டனர்.
தற்போதைய மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றிக்கு துல்லியமான உளவுத் தகவல்கள் மற்றும் மாவோயிஸ்டுகளிடையே நிலவிய வேறுபாடுகளுமே மகாராஷ்டிரா மாநில காவல் துறை தலைவர் சதீஷ் மாத்தூர் திங்களன்று கூறியுள்ளார்.
சமீப காலங்களில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. காவல் துறையினர் நடமாட்டம் குறித்து நக்சல்களுக்கு தகவல் கொடுத்து வந்த உள்ளூர்வாசிகள் தற்போது நக்சல்கள் நடமாட்டம் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.
சக நக்சல்களுடன் காதல், கட்சி மீதான நம்பிக்கை இழப்பு, காவல் படைகளின் கண்காணிப்பு அதிகரிப்பு, ஆசையைத் தூண்டும் வகையிலான மறுவாழ்வுத் திட்டங்கள் ஆகியன மாவோயிஸ்டுகள் அமைப்பைவிட்டு விளக்குவதற்காக காரணிகளாக உள்ளன.
அதற்கும் மேலாக ஆயுதப் போராட்டம் தொடங்க காரணமாக இருந்த சமூக, அரசியல், பொருளாதார சூழல்கள் அந்த மாவட்டத்தில் மாறிவருவதும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
2013இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது, “தொடர்ச்சியான கைதுகளால் மகாராஷ்டிராவில் நமது இயக்கம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நாடு முழுவதும் புரட்சிக்கான சூழல் மோசமாக இருந்தாலும், எல்லா மாநிலங்கிளிலும் நிலைமை ஒரே மாதிரியாக இல்லை. தண்டகாருண்யா பகுதியில் நமக்கான மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம் மற்றும் மக்களிடையே உள்ள எதிர்ப்புணர்வு குறைந்து வருகிறது. நாம் ஆள் சேர்ப்பதும் குறைந்துள்ளது. இந்தக் காரணங்களால் நமது இயக்கம் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது.”
மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் உளவு மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. உள்ளூர் மக்களை தங்களுக்கு தகவல் சொல்வதற்காக காவல் படைகள் சேர்த்தது தற்போது பலனளித்து வருகிறது.
சி-60 படை என்பது என்ன?
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக பகுதியில் மகாராஷ்டிரா அரசு உருவாக்கிய சிறப்பு காவல் படை இது. உள்ளூர் பழங்குடியினரை இந்தப் படையில் சேர்க்க அரசு அதிக கவனம் செலுத்துகிறது.
தொடக்கத்தில் பழங்குடி இளைஞர்கள் 60 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழுவில் தற்போது ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி, சன்மானம் என அனைத்தும் வழங்கப்படுகிறது.
இந்தப் படையில் சேர முயன்றவர்களை 1990களிலும் 200களிலும் நக்சல்கள் கொலை செய்ததாக உள்ளூர்வாசிகள் நினைவுகூர்கிறார்கள்.
ஆனால் சமீபத்திய தாக்குதல் மற்றும் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தாக்குதல்களையும் சி-60 படையினர் வெற்றிகரமாக செய்தனர்.
சுக்தேவ் மற்றும் நந்தா ஆகியோர் திருமணம் செய்துகொண்டபோது அவர்களின் முன்னாள் சகாக்கள் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர். ஆயுதப் போராட்டத்தில் இருந்து திருமண வாழ்க்கைக்கு மாறும் அவர்களின் முடிவு சாதாரணமாகத் தெரிந்தது. ஆனால், மாவோயிஸ்டுகளுக்கு மாறிவரும் சூழ்நிலைகளை அறிவதற்கான ஆரம்பப் புள்ளியாக அத்தகைய திருமணங்கள் இருந்தன.
-BBC_Tamil