தலித் மக்கள் மீதான கொடுமைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 12ஆந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இந்த கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அங்கு மாயாவதி பேசியதாவது, “மதசார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி வேட்பாளர்களை கர்நாடக மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். கர்நாடகத்தில் சிறப்பான ஆட்சியையும், ஊழல் இல்லாத நிர்வாகத்தையும் குமாரசாமியால் மட்டுமே தர முடியும். மத்திய மோடி அரசு, தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்து அமைப்பினர் தலித் மக்களை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி தெரிந்திருந்தும் பிரதமர் மோடி, எதையும் கண்டுகொள்ளாமல் மவுனமாக உள்ளார். மோடியின் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மோடியின் நடவடிக்கையால், நாட்டு மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து விட்டனர். இதனால் மக்கள் மோடி அரசு மீது வெறுப்பில் உள்ளனர். கர்நாடகத்தில் எங்கள் கூட்டணி கட்சி ஆட்சி அமைத்தால், குமாரசாமி சிறப்பாக ஆட்சி செய்வார். முன்னாள் பிரதமர் தேவகவுடா அரசியல் அனுபவம் மிக்கவர். அவருடைய அனுபவம், குமாரசாமிக்கு பக்கபலமாக இருக்கும்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com