கருக்காலத்தின் போது வயிற்றில் இருக்கும் பாலினத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்துவது நமது நாட்டில் தடை செய்யப்பட்ட, சட்டவிரோத, தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா பகுதியில் வசிக்கும் அனில் பான்டா என்பவர் எட்டு மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அருகில் இருக்கும் தனியார் நர்சிங் ஹோமிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.
அந்த நர்சிங் ஹோமின் உரிமையாளரான டாக்டர் அருண் குமார் என்பவர், பான்டாவின் மனைவிக்கு வழங்கப்பட வேண்டிய மேல்சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு தன் மனைவியை அழைத்து சென்றார். அங்கு உடனடியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறியும் அல்ட்ராசவுன்ட் ஸ்கேன் டெஸ்ட் செய்யப்பட்டது.
அதன்முடிவுப்படி, பான்டாவின் மனைவிக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என்று அனுஜ் குமார் என்னும் மருத்துவர் உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
எனினும், ஸ்கேன் சோதனை முடிவுக்கு முரணாக பான்டாவின் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தன் குழந்தையை பார்க்க மருத்துமனைக்கு பான்டா விரைந்தார்.
ஆனால், பிறந்த தனது குழந்தை உயிரற்ற நிலையில் இருந்தது அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தை உயிரிழந்தது குறித்து காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
விசாரணையில் ஸ்கேன் முடிவுக்கு மாறாக ஆண் குழந்தை பிறந்ததால், குழந்தையின் பிறப்புறுப்பை டாக்டர் வெட்டியதால் குழந்தை இறந்திருப்பது தெரியவந்தது. இவ்விவகாரத்தில் தொடர்புடைய அருண் குமார், அனுஜ் குமார் ஆகிய இரண்டு டாக்டர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய வலைவீசி தேடி வருகின்றனர்.
உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மருத்துவமனையில் அல்ட்ராசவுன்ட் இயந்திரங்களை நிறுவி, கருவில் வளரும் குழந்தை ஆணா?, பெண்ணா? என்று சத்தமில்லால் சோதனைகளை நடத்தி, இதற்காக இவர்கள் பெருந்தொகையை கட்டணமாக பெற்று லாபம் சம்பாதித்து வந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
தலைமறைவாக இருக்கும் அருண் குமார் மற்றும் அனுஜ் குமார் என்னும் கொடூர டாக்டர்கள் இயக்கி வந்த இரண்டு மருத்துவமனைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக சத்ரா மாவட்ட அரசு மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.பி. சிங் தெரிவித்துள்ளார்.
-athirvu.com