சேலம்: காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு தீர்மானம், கடிதம் அனுப்பியும் அவரிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து விட வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிவிட்டது.
எந்த பதிலும் இல்லை அதைத் தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்த பிரதமருக்கு கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால் இவற்றுக்கு பிரதமரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
80 லட்சத்தில் மணி மண்டபம்
சேலத்தில் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மணி மண்டபம் கட்டும் பணிக்காக இன்று முதல்வர் அடிக்கல் நாட்டினார். சுமார் 2100 சதுர அடி பரப்பளவில் ரூ.80 லட்சத்தில் மணி மண்டபம் கட்டப்படவுள்ளன.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
அடிக்கல் நாட்டு விழாவுக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு தீர்மானம், கடிதம் அனுப்பியும் பதில் வரவில்லை. காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தவில்லை.
நல்ல முடிவு கிடைக்கும்
பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் பதில் வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தொடுத்துள்ளோம். அது குறித்து மே 3-ஆம் தேதிக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.