வளர்ப்பு யானைகளின் பரிதாப வாழ்க்கை – பெருகும் மரணம், வீழும் ஆயுள்

சேலம் மாவட்டம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 42 வயதான யானை ராஜேஸ்வரி, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உடல்நிலை சரியில்லாமல் படுத்துக் கிடந்தது. ராஜேஸ்வரியின் இரண்டு முன்னங்கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் உடல் முழுவதும் புண் இருந்தது.

இந்த யானையைக் கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், அண்மையில் அது இயற்கையாகவே உயிரிழந்தது.

1990-ல் கோயிலுக்கு விற்கப்பட்டதில் இருந்து, ராஜேஸ்வரி கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தது.

பக்தர்களை ஆசீர்வதிப்பதற்காகவும், தெய்வங்களுக்கு நீர் ஊற்றுவதற்கும், தண்ணீர் கொண்டு வருவதற்கும், நீண்ட நேரங்களாகக் கல் தரையில் ராஜேஸ்வரி நிற்கவேண்டியிருந்தது.

2004-ம் ஆண்டு யானைகளுக்கான புத்துணர்வு முகாமுக்கு செல்லும் வழியில், லாரியில் இருந்து விழுந்த ராஜேஸ்வரியின் கால் உடைந்தது. அப்போது முதல் உடைந்த காலுடன் அது வாழ்ந்து வந்தது. சமீபத்தில், ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் அதனை தூக்கியபோது அதன் தொடை உடைந்தது. உடல்நிலை சரியில்லாமல் இருந்த இந்த யானை பிறகு உயிரிழந்தது.

யானை

ராஜேஸ்வரியின் துயரக்கதை, இந்தியாவில் இருக்கும் 4,000 வளர்ப்பு யானைகளின் நிலைமைகளையும் பிரதிபலிக்கிறது. பெரும்பாலும் அசாம், கேரளா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான வளர்ப்பு யானைகள் உள்ளன.

உலக விலங்கு பாதுகாப்பு அறிக்கையின்படி, மனிதர்கள் பயன்படுத்துவதற்காக, யானைகளைப் பழக்கப்படுத்துவதின் பிறப்பிடம் இந்தியா என பரவலாக கருதப்படுகிறது. இந்த பழக்கம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஆரம்பமானது.

யானை

தென்னிந்தியாவில் மத விழாக்களின் ஊர்வலங்களுக்காகவும், திருமணம், கடை, உணவகம் திறப்பின் போதும் யானைகள் வாடகைக்கு அழைத்து வரப்படுகின்றன. இந்த யானைகள் திறந்த வாகனங்களில் நீண்ட தூரம் ஏற்றிச்செல்லப்படுகின்றன. பல மணி நேர வெப்பமான சூழலில் சாலைகளில் நடக்கின்றன. அவை அவ்வப்போது கோயில் திருவிழாக்களில் கட்டுப்பாட்டை இழந்து ஓடி, பக்தர்களை கொல்கின்றன.,

பிற இடங்களில், சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட யானைகள் சவாரிக்கு பயன்படுத்தப்படுகின்றன. சவாரிக்கும், தொட்டு பார்ப்பதற்கும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பதை யானைகள் நிறைவேற்றுகின்றன.

அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்காகவும், வர்த்தக நிறுவனங்கள் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காகவும், தேசிய பூங்காக்களில் சுற்றுலாவிற்கும் யானைகள் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பிச்சை எடுக்க கூட யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

2015-17 காலக்கட்டத்தில் கேரளா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மூன்று மாநிலங்களில் மட்டும், தனியாரிடம் இருந்த 70க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் ”இயற்கைக்கு மாறான நிலைமையில், இளம் வயதில் இறந்துள்ளதாக” ஊடக செய்திகள் கூறுகின்றன. இந்த ஆண்டு கேரளாவில் மட்டும் 12 வளர்ப்பு யானைகள் இறந்துவிட்டன.

யானை

”இந்த இறப்புகளில் பெரும்பாலானவை சித்திரவதைகள், துஷ்பிரயோகம், அதிக வேலை அல்லது தவறான நிர்வாக முறைகள் காரணமாக உள்ளன” என்கிறார் வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத் தலைவர் சுப்பர்ணா கங்குலி.

பெரிய அறியாமை

வளர்ப்பு யானைகளுக்கு உடற்பயிற்சிக்கும், மேய்ச்சலுக்கும் மற்றும் வாழ்விடத்திற்கும் இயற்கை சூழலில் இடம் இல்லை. அவை பல மணி நேரம் கல் தரையில் நிற்க வேண்டியதுள்ளது. யானைகளின் உடல்நிலை சரியில்லாமல் போவதற்கும் இதுவே போதும். இதனால் யானைகளுக்கு இயல்பாகவே கால் அழுகல் ஏற்படலாம். சில நேரங்களில் இது தீவிர தொற்றுக்கு வழிவகுக்கிறது. வெளியில் இருக்கும்போது, சூரிய ஒளி யானைகளின் கண்களை பாதிக்கலாம். யானைகளின் பாதுகாவலர்கள் மற்றும் மேலாளர்களின் மொத்த அறியாமையே இதற்குக் காரணம் என கங்குலி குற்றம்சாட்டுகிறார்.

பிறகு மோசமான உணவும் காரணம். யானைகள் மெதுவாக உண்பவை. காட்டுப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட வேர்கள், தளிர்கள், புற்கள் மற்றும் கிழங்குகளை சாப்பிடும். ஆனால்,பிடித்து வளர்க்கப்படும் யானைகளின் உணவு கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

யானை

எடுத்துக்காட்டாக, வட இந்தியாவின் சில பகுதிகளில், குளுக்கோஸ் நிறைந்த கரும்பு மட்டுமே யானைகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது.

இதனால் அவற்றின் உடல் நலம் பாதிக்கப்படும் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கேரளாவில் 20 வருடங்களுக்கு முன்பு 70-75 வருடங்களாக ஆக இருந்த அடைத்துவைக்கப்பட்ட யானைகளின் ஆயுட்காலம், தற்போதும் 40க்கும் குறைவான வருடங்களாக வீழ்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கோயில் யானைகளுக்கு அளிக்கப்படும் புத்துணர்வு முகாமுக்கு, தொலை தூரங்களில் இருந்து யானைகள் லாரியில் அழைத்து வரப்படுகின்றன. சாலை போக்குவரத்தை சமாளிக்க முடியாததாலும், லாரியில் இருந்து கீழே விழுவதாலும் பல யானைகள் இறக்கின்றன.

யானைகளைக் காட்சிக்கு வைப்பதையும், விற்பதையும் இந்திய உச்ச நீதிமன்றம் சட்டவிரோதம் என்று கூறியுள்ளது. மேலும், யானைகளை மத விழாக்களில் பயன்படுத்துவதை தடை விதிக்குமாறும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானை

கேரளா மற்றும் ராஜஸ்தானில் 350 க்கும் அதிகமான பிடித்து வளர்க்கப்படும் யானைகள் “சட்டவிரோதமானவை” – அவற்றுக்கு எந்த உரிமைப் பத்திரங்களும் இல்லை.

போதுமான சட்டங்கள் இருந்தாலும், போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நல்ல வருமானம்

பிடித்து வளர்க்கப்படும் யானைகளால் நல்ல வருமானம் கிடைக்கிறது. கேரளாவில் மதத்திருவிழாக்களில் ஒரு நாள் யானையைப் பங்கேற்க வைத்தால், அதன் உரிமையாளர் சுலபமாக 70.000 ரூபாய் சம்பாதிக்க முடியும்.

”பல தசாப்தங்களாக யானை கடத்தல், வர்த்தகர்களுக்கும், இளம் யானைகளைப் பிடிக்கும் வேட்டைக்காரர்களுக்குமான கள்ளத் தொடர்பு, இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு துறை, அதில் இருக்கும் ஊழல் ஆகியவையே இந்த யானைகளின் இன்றைய மோசமான நிலைமைக்குக் காரணம்” என்கிறார் கங்குலி.

பிடித்து வளர்க்கப்படும் யானைகளைப் பாதுகாக்க விரைவில் உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-BBC_Tamil

TAGS: