நீ கோவிலுக்குள் வரக் கூடாது.. தடுத்து நிறுத்திய “ஆதிக்கம்”.. போராடி வாதாடிய தலித் பெண்

புதுச்சேரி: புதுச்சேரியில் கோயிலுக்குள் சென்ற தலித் பெண் விரட்டி அனுப்பப்பட்ட சம்பவ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதுச்சேரி அருகே உள்ள கிராமம் கூனிச்சம்பட்டு. இந்த கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து செல்வர் இந்த கோவிலின் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய அதே கிராமத்தை சேர்ந்த சுதா 27 என்பவர் சென்றுள்ளார். இவர் தலித் சமூகத்தவர் என கூறப்படுகிறது.

அப்போது கோயிலில் இருந்த சிலர் சுதாவை தடுத்து நிறுத்தி கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்றும் வெளியே செல்லுமாறும் கூறியுள்ளனர். வெளியே செல்ல மறுத்த அந்த சுதா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால் சுதாவை மிரட்டி, அங்கிருந்தவர்கள் வெளியேற்றினர். கடைசிவரை சுதாவால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. இந்த சம்பவம் சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

டீ கடைகளில் இரட்டைக் குவளைமுறை, சலூன் கடைகளில் முடிவெட்ட மறுப்பது, கோவிலுக்குள் சென்று சாமிகும்பிட அனுமதி மறுப்பு, என தீண்டாமையின் வடிவங்கள் இன்னும் தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் தொடர்வது வேதனையளிக்கிறது.

பக்திகள் அனைத்தையும் வெறியாக்கும் முயற்சியில் இனி ஆதிக்க சக்திகள் ஈடுபடுவதை விடுத்து, பொதுப்பார்வைகள் வெகுஜன மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். வர்ணாசிரம அரசியல் மாற்றப்பட வேண்டும்.

மாறிவரும் விஞ்ஞான யுகத்தில், இன்னமும் இதுபோன்ற வேறுபாடுகளை பார்த்துக்கொண்டிருப்பது நமது சமுதாயத்தை மேலும் அவலநிலையின் விளிம்பு நிலையில் கொண்டு போய்நிறுத்திவிடும்.

இதனால் பாதிக்கப்படபோவது வருங்கால சந்ததிகள்தான். இன-பேத வேறுபாடு களையப்படவில்லையென்றால், சமூகக் கலப்பு என்பது பற்றிய புரிதலே இல்லாமல் போய்விடும். இல்லையென்றால் தாழ்த்தப்பட்டோர்கள் ஊமைகளாக இருந்த காரணத்தால் அவர்களின் உரிமைக்காக விதை போட்டு கொடுத்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேர்கர் ஆகியோரின் கனவுகள் கனவுகளாகவே போய்விடும்.

-tamil.oneindia.com

TAGS: