இந்திய ஒன்றியம் என்பது தேசிய இனங்களின் ஒன்றியம்: கோர்கோ சாட்டர்ஜி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோர்கோ சாட்டர்ஜி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி உரிமை குறித்தும் கூட்டாட்சி குறித்தும் தேசியம் குறித்தும் எழுதிவருபவர்.

நரம்பியல் மருத்துவரான கோர்கோ, தமிழகத்தில் தற்போது தமிழ் தேசியம் குறித்த விவாதம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் பிபிசியிடம் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து:

கே. தமிழ்நாடு ஏதாவது முக்கியப் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது தமிழ் தேசியம் குறித்த விவாதம் தீவிரமடைகிறது. இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் துணை – தேசியவாதத்திற்கான (Sub – Nationalism) வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?

ப. இந்த துணை தேசியவாதம் என்ற வார்த்தையே, பயத்தில் இருந்துதான் வருகிறது. தேசியவாதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது இந்தியாவின் ஒற்றுமைக்கு சவாலாக இருக்குமோ என்ற பயத்தில் துணை தேசியவாதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இந்த பயம் தேவையற்றது. ஒரு தேசத்திற்கான அடிப்படை என்பது மொழிதான். உலகைப் பாருங்கள். குறிப்பாக இஸ்லாமிய உலகைப் பாருங்கள். அவை மொழியினால்தான் பிரிந்துகிடக்கின்றன. அதுதான் தேசியத்தின் அடிப்படை.

இந்திய ஒன்றியம் என்பது தேசிய இனங்களின் ஒன்றியம். தேசிய இனங்களின் ஒன்றியமானது, பரஸ்பர நன்மைக்காக இணைந்து இயங்குவது என்பது சாத்தியமானதுதான்.

ஆனால், இந்த தேசிய இனங்கள் எல்லாமும் அவர்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் தாமாக முன்னேறக்கூடிய வாய்ப்பை, தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாய்ப்பை இந்திய ஒன்றியம் வழங்க வேண்டும்.

1947க்குப் பிறகு இந்தியா முழுக்கவும் அதிகாரம் மையப்படுத்தப்பட்ட ஒரு நாடாகிவிட்டது. இதனை உண்மையிலேயே மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இதனை சட்டரீதியாகவும் அரசியல் சாசன ரீதியாகவும் செய்ய வேண்டும். முதலில், பொதுப் பட்டியலிலும் தேசியப் பட்டியலிலும் உள்ள பல அம்சங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

பொதுப் பட்டியல் என்பதையே நீக்கவேண்டும்

தவிர, இந்தப் பொதுப் பட்டியல் என்பதையே நீக்கவேண்டும். மாநில அரசின் விவகாரங்களில் தலையிட, ஒரு வழியாக இந்தப் பொதுப் பட்டியல் மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் இந்த பொதுப் பட்டியலை ஒழிக்க வேண்டும் என்பதை முன்மொழிந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு கருத்தைச் சொன்னார். அதாவது மத்திய அரசிடம் வெளியுறவுத் துறை, பாதுகாப்பு, நிதி, ரயில்வே ஆகிய நான்கு துறைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றார். இதையே அண்ணாதுரையும் சொன்னார்.

கோர்கோ சாட்டர்ஜி

ஹிந்து – ஹிந்தி – ஹிந்துஸ்தான்

ஹிந்தி – ஹிந்து – ஹிந்துஸ்தான் என்ற பாணியில் மத்திய அரசை சில சக்திகள் மாற்ற நினைக்கும் நிலையில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் என்பது வெறும் பிரதமர் பதவிக்கான தேர்தல் அல்ல.

2019க்குப் பிந்தைய எதிர்காலம் என்பது இந்தியக் கூட்டாட்சியின் காலகட்டமாக இருக்கக்கூடும்.

கூட்டாட்சி என்பது, நமது அரசியல் சாசனத்தின் மாற்ற முடியாத ஓர் அம்சம் என உச்ச நீதிமன்றமே சொல்லியிருப்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.

ஆக, இந்தியாவில் தேசிய இனங்களின் கூட்டாட்சிக்கான எதிர்காலம் மிகப் பிரகாசமாகவே இருக்கிறது.

ஹிந்தி அழிப்பு
சென்னையில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார் சபா இருக்கிறது. வட இந்தியாவில் உத்தர பாரத தமிழ் பிரச்சார் சபா இருக்கிறதா?

கே. கூட்டாட்சியை நமது அரசியல் சாசனம் அனுமதிக்கிறது என்கிறீர்கள். எந்தப் பொருளில் அதைச் சொல்கிறீர்கள்?

ப. நமது அரசியல் சாசனத்தை இரண்டுவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, தற்போது இருக்கும் அரசியல் சாசனம். மற்றொன்று நமது அரசியல் சாசனம் என்னவாக இருக்க முடியும் என்பது.

அதாவது அதில் இருக்கும் சாத்தியங்கள். நமது அரசியல் சாசனம் பல முறை திருத்தப்பட்டது என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அது அரசியல் சாசனத்திற்கு எதிரானதல்ல.

ஒரு விஷயம் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கும் பொதுப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கும் மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கும் மாற்றப்பட முடியும் என்றால், இதைத் தலைகீழாகவும் செய்ய முடியும்.

அப்படிச் செய்வது அரசியல் சாசன விரோதமானது என்றால், அப்படி செய்வது சாத்தியமில்லால் ஆக்கப்பட்டிருக்கும். ஆனால், நமது அரசியல் சாசனத்தில் அது சாத்தியம்தான்.

ஆக, அரசியல் சாசனம் என்பது இப்போது இருப்பது மட்டுமல்ல, இனி எப்படி இருக்க முடியும் என்பதும்கூடத்தான்.

தமிழ் மொழி அ

மொழியே தேசியத்தின் அடிப்படை

கே. தேசியவாதம் என்பது குறித்து பல்வேறு வரையறைகள் சொல்லப்படுகின்றன. எதன் அடிப்படையில் தேசியவாதத்தை நீங்கள் வரையறுக்கிறீர்கள்? இங்கே, மதம், நிலப்பரப்பு, மொழி, ஜாதி என பல்வேறு அம்சங்களில் அதனை வரையறுக்கிறார்கள்?

ப. தேசியவாதத்தைப் பொறுத்தவரை, மொழிதான் அடிப்படை. உலகம் முழுவதுமே அப்படித்தான்.

மதம் தேசியவாதத்திற்கு அடிப்படையாக இருக்க முடியுமா என்று முதலில் பார்க்கலாம். ஐக்கிய அரபு குடியரசு, எகிப்து மற்றும் சிரியவை இணைத்து உருவாக்கப்பட்டது.

அந்த இரு நாடுகளுமே இஸ்லாமிய நாடுகள், அங்கு வசிப்பவர்கள் இன ரீதியாக அரேபியர்கள்.

ஆனால், அவர்கள் பேசும் மொழியில் சிறு சிறு வித்தியாசம் இருந்தது. அதனால், அவர்களால் ஒன்றாக இருக்க முடியவில்லை.

பாகிஸ்தானை எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்லாம் என்ற மதத்தால் உருவான நாடு. ஆனால், மதத்தால் மட்டுமே ஒன்றாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அது எந்த மதம் என்பது முக்கியமல்ல. மதம் ஒரு தேசியவாதத்தை உருவாக்க முடியாது, அவ்வளவுதான்.

இந்திய ஒன்றியத்தின் தனித்துவம் என்ன?

இந்திய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, நமக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு இருக்கிறது. அதாவது இங்கு மட்டும்தான் பொதுவான மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்கியிருக்கிறோம்.

குடியரசுத் தத்துவம் மற்றும் சமத்துவம்தான் நம் அடிப்படையான தத்துவங்கள். மேலும், பல்வேறு தேசிய இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு.

இந்த நிலையில், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேசியவாதம் நமக்குத் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் மேலான ஒரு அரசியல் சாசனமும் அரசியல் சாசன மதிப்பீடுகளும்தான் தேவை. அந்த மதிப்பீடுகளுக்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டும். அதைத் தவிர்த்த வேறு தேசிய உணர்வும் தேவையில்லை.

உலகத்துக்கே உதாரணமாக இருக்க முடியும்

இந்திய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, ஒரு மிகப் பெரிய நாடு. அந்த வகையில் நாம் உலகிற்கே ஓர் உதாரணமாக இருக்க முடியும்.

பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் அரசியல் சாசனம் அடிப்படையிலான பொது மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒன்றாக இணைந்து அமைதியாக வாழ முடியும் என்று நிரூபித்திருக்கிறோம்.

நாம் வேற்றுமையில் ஒற்றுமை குறித்துப் பேசுகிறோம். ஒற்றுமை மிக முக்கியம். அதனால், பல நன்மைகள் இருக்கின்றன.

அதே நேரம், ஒரு தரப்பின் மதிப்பீடுகளை, வரலாற்றை இன்னொரு தரப்பின் மீது திணிக்கக்கூடாது.

மையம் எது?

உதாரணமாக, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வரலாற்றை எடுத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் மேல் மற்றும் மத்திய கங்கைச் சமவெளிகளின் வரலாறுதான் இருக்கும். அது பெரும்பாலும் இந்தி பேசுபவர்களின் வரலாறு.

ஒரு நாகாவுக்கோ, தமிழருக்கோ அதில் என்ன தொடர்பு இருக்க முடியும்? ‘ஹர்ஷவர்தன் தெற்குநோக்கி வரும்போது புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டார்’, ‘முகலாயர்கள் மேற்கு நோக்கிப் படையெடுத்தார்கள்’ என்று எழுதப்படுகிறது.

அப்படியானால், மையம் எது, இந்தி பேசும் மாநிலங்களா? இம்மாதிரியான மனப்போக்குதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்.

கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தும் நாங்கள், இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையை வலியுறுத்துகிறோம். கூட்டாட்சி என்பதை சரியான அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டுகிறோம்.

ஜிஎஸ்டி

கே. அப்படியானால், தற்போது இந்தியாவில் நிலவும் தேசியவாதம் எத்தகையது?

ப. இந்திய மக்களை தற்போது ஒருங்கிணைக்கும் தேசியவாதம், அதன் அரசியல் சாசனம்தான். அந்த அரசியல் சாசனத்திற்கு விசுவாசமாக இருப்பதே ஒற்றுமையின் அடிப்படை. இந்த ஒற்றுமையைத்தான் நாம் வலியுறுத்த வேண்டும்.

ஆனால், அந்த ஒற்றுமை தற்போது ஹிந்து – ஹிந்தி – ஹிந்துஸ்தான் மேலாதிக்கவாதிகளிடமிருந்து மிகப் பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்துவருகிறது.

இவர்கள்தான் இந்தியா முழுவதும் ஒரே மொழி பேசப்பட வேண்டுமென விரும்புகிறார்கள். ஒரே மதம் இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள்.

மற்ற மொழியைப் பேசுபவர்களும் பிற மத்தினரும் இரண்டாம் நிலை குடிமக்களாக இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள். இதை ஏற்க முடியாது.

மத்திய அரசுப் பணிகளில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்தி பேசுபவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்தவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால், நிதர்சனத்தில் அப்படியில்லை.

மொழியின் அடிப்படையில், பல்வேறு மட்டங்களில் மக்களைப் பிரித்தால், அதுதான் ஒற்றுமையைக் குலைக்கும்.

அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது, பல சமஸ்தானங்கள் இருந்தன. அவர்களை இந்திய ஒன்றியத்தோடு இணைத்த அந்தத் தருணத்தில் மிக வலுவான மத்திய அரசு தேவைப்பட்டது என்பது உண்மைதான்.

கேபினட் மிஷன் திட்டம்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக முன்வைக்கப்பட்ட கேபினட் மிஷன் திட்டத்தில் வலுவான ஒரு கூட்டாட்சியைக் கொண்டதாகவே இந்திய அரசு திட்டமிடப்பட்டது. இந்தியாவை இரண்டாகப் பிரிக்க, அந்தத் திட்டம் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால், இந்த கேபினட் மிஷன் திட்டம் ஏற்கப்படாததாலேயே இந்தியா உடைந்தது. அதிகாரத்தை மையப்படுத்த மையப்படுத்த, எல்லாம் சிதறித்தான் போகும்.

15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையை எடுத்துக்கொள்வோம். தமிழகத்தின் வரி வருவாயை எடுத்து உத்தர பிரதேசத்திற்கும் மேற்கு வங்கத்தின் வருவாயை எடுத்து மத்தியப் பிரதேசத்திற்கும் கொடுப்பதில் எந்தப் பிரச்சனையுமில்லை என்று நினைக்கக்கூடாது.

2026ல் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்புச் செய்யப்படும். அப்போது இந்தியா, ஹிந்து – ஹிந்தி பெரும்பான்மைவாத நாடாக மாறும் அபாயம் இருக்கிறது. அதைக் கண்டிப்பாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மக்கள் தொகை அடிப்படையில் அப்படித்தான் மாறும் என்றால், அதை எப்படி எதிர்கொள்வது?

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களைக் கொடுப்பதன் மூலம் அதைச் செய்யலாம். மைய அரசு, சில விஷயங்களை மட்டுமே தன் கையில் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக, ராணுவம் மத்திய அரசின்வசம்தான் இருக்க வேண்டும். நிச்சயம் ஒவ்வொரு மாநிலமும் ராணுவத்தை வைத்திருக்க முடியாது. அதேபோலத்தான் வெளியுறவுத் துறை, நிதி போன்றவையும். அப்படித்தான் இருக்க முடியும்.

உருது-இஸ்லாமிய தேசியவாதமும் சிங்கள – பௌத்த தேசியவாதமும் நமது அண்டை நாடுகளில் என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். இவையெல்லாம் சமூகத்திற்கு எதிரான மேலாதிக்கச் சிந்தனைகள்.

ஹிந்தி எதிர்ப்பு
ஹிந்தி ஒரு போலியான கருத்துருவாக்கம். இவர்களைப் பொறுத்தவரை ராஜஸ்தானியும் இந்திதான். போஜ்புரியும் இந்திதான். சத்தீஸ்கரியும் இந்திதான்.

அடையாளத்தைத் தேர்வு செய்யும் உரிமை

கே. மொழி அடிப்படையிலான தேசியவாதம் என்று பேச ஆரம்பித்தால் அது பெரும்பாலும் ஜாதியில்தான் போய் முடிகிறது. தமிழகத்திலும் அது பல தருணங்களில் நடக்கிறது.

ப. இதை அரசியல் சாசன ரீதியில்தான் எதிர்கொள்ள முடியும். யார் எந்த மொழியைப் பேசினாலும் இந்திய ஒன்றியத்தில் அவர்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படாது என்ற நிலை இருக்கவேண்டும்.

தவிர, ஓர் அடையாளத்தை ஒருவர் விரும்பினால் அடையமுடியும் என்ற நிலை வேண்டும்.

உதாரணமாக, எங்களுடைய மூதாதையர் உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். அதற்காக என்னை இப்போது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவராகச் சொல்ல முடியாது. நான் ஒரு வங்காளி. அப்படித்தான் இதை அணுக வேண்டும்.

அதைவிட்டுவிட்டு, உங்கள் மூதாதையர் யார் என்று ஆராய ஆரம்பித்தால் அது இனவெறியில்தான் போய் முடியும்.

அரசியல் சாசனத்தை வைத்து தேசத்தை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, ஹிந்தி – ஹிந்து – ஹிந்துஸ்தானி என்ற வார்த்தைகளை வைத்து ஒருங்கிணைக்கப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துக்கொள்வோம்.

ஹிந்தி என்பது போலியான கருத்துருவாக்கம்

முதலில் ஹிந்தி. இது ஒரு போலியான கருத்துருவாக்கம். இவர்களைப் பொறுத்தவரை ராஜஸ்தானியும் இந்திதான். போஜ்புரியும் இந்திதான். சத்தீஸ்கரியும் இந்திதான். இது கேலிக்குரியது.

தவிர, இந்த மொழியை இவர்கள் இந்தியாவில் எல்லோர் மீதும் திணிக்கிறார்கள்.

இங்கே சென்னையில் பாருங்கள், தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார் சபா இருக்கிறது. வட இந்தியாவில் உத்தர பாரத தமிழ் பிரச்சார் சபா இருக்கிறதா?

பரிமாற்றம் என்பது இரு புறமும் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அது நட்பாக இருக்கும். இல்லாவிட்டால் அது பலாத்காரம்.

அடுத்ததாக, இந்து என்ற அம்சம். சட்டத்தைப் பொறுத்தவரை நான் இந்துதான். ஆனால், வங்காளத்தில் என்னுடைய மதம் சாக்தம். நான் காளியை வணங்குபவன். காளிக்கு மாமிசத்தைப் படைப்பவன்.

இந்து மேலாதிக்கவாதிகள் நான் இந்துக் கடவுளுக்குப் படைத்ததை சாப்பிடுவார்களா? அவர்களைப் பொறுத்தவரை, இந்து என்றால் மரக்கறியை உண்பவர்.

ஏர் இந்தியா விமானத்தில் இப்போது அசைவ உணவு பரிமாறப்படுவதில்லை. மத்திய அரசு நிகழ்ச்சிகளில் அவைசம் நிறுத்தப்பட்டுவிட்டது.

இத்தனைக்கும் இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். அப்படியிருக்கும்போது, மதத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் இம்மாதிரியான கட்டுப்பாடுகள் நிதர்சனத்திற்கு எதிரானவை. நாட்டைப் பிரிப்பவை.

ஹிந்தி
ஹிந்துஸ்தான் என்பது இந்தி பேசும் பகுதிகள் மட்டும்தான். மேற்கு வங்கம், தமிழகம், கேரளா போன்றவை இந்துஸ்தானத்தைச் சேர்ந்தவையல்ல.

மூன்றாவதாக, ஹிந்துஸ்தான். இந்தி பேசும் பிராந்தியங்களில் உள்ள அரசியல்வாதிகள், பாலிவுட்காரர்கள் இந்த வார்த்தையை இந்தியாவைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

ஹிந்துஸ்தான் என்பது இந்தி பேசும் பகுதிகள் மட்டும்தான். மேற்கு வங்கம், தமிழகம், கேரளா போன்றவை இந்துஸ்தானத்தைச் சேர்ந்தவையல்ல.

மேற்கு வங்கத்தில் சுதந்திரத்திற்கு முன்பாக நாங்கள், பிஹார், உ.பி. மக்களைக் குறிக்கவே ஹிந்துஸ்தானி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். அப்படியானால், என்ன அர்த்தம்? நாங்கள் ஹிந்துஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று அர்த்தம்.

1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் இரு நாடுகளான பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான வார்த்தையாக, தேசமாக ஹிந்துஸ்தான் முன்னிறுத்தப்பட்டது. அப்போதுதான் ஹிந்துஸ்தான் இந்தியா முழுவதும் ஒரு தேசத்தையும் குறிப்பதாக மாற்றப்பட்டது.

ஹிந்தி பேசுவோர் எண்ணிக்கை – தவறான கணக்கு

கே. இந்த துணை தேசியவாதம் என்ற கருத்து வட இந்தியாவில் எப்படி இருக்கிறது. அங்கே இம்மாதிரி சிந்தனைகள் இல்லையா?

ப. அவர்களும் தங்கள் உரிமைக்காக குரல்கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். வட இந்தியாவின் சில பகுதிகளில் இம்மாதிரி சிந்தனைகள் இருக்கின்றன.

பல வட இந்திய மாநிலங்களில், இந்தியையே தங்கள் தாய்மொழி என்று சொல்வதை பல பகுதிகளின் மக்கள் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

ராஜஸ்தானி பேசுபவர்கள் தங்களைத் தனி மொழியாக அங்கீகரிக்க வேண்டுமெனக் கோரியுள்ளனர். போஜ்புரி பேசுவோரும் இதைக் கோரியுள்ளனர்.

40 கோடிப் பேர் இந்தி பேசுகிறார்கள் என்பது தவறான கணக்கு. ராஜஸ்தானி பேசுபவர்கள், சத்தீஸ்கரி பேசுபவர்கள் தங்கள் மொழியின் உரிமைக்காகப் பேசவில்லையென்றால் எல்லாம் மோசமாக முடியும். -BBC_Tamil

TAGS: