டீக்கடை நடத்திக் கொண்டு தடகளத்தில் சாதிக்கும் ‘பதக்க மங்கை’

தடகளத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து தொடர்ந்து சாதித்து வரும் கோவையைச் சேர்ந்த கலைமணி, குடும்ப சூழ்நிலை காரணமாக டீக்கடை நடத்தி வருகிறார்.

மூத்தோர் தடகளத்தில் அரசின் கவனம் போதுமானதாக இல்லை என்பதால் திறமை இருந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போவதாக இவர் கூறுகிறார்.

இளமையிலேயே இயல்பாக இருந்த திறமை

தங்கம், வெள்ளி, வெண்கலம் என நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ள தடகள வீராங்கனை கலைமணியை கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஒரு சாதாரண சாலையோர டீக்கடையில் பார்க்க முடிந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்விகமாக கொண்ட கலைமணி திருமணத்திற்கு பிறகு தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். பள்ளிக்காலம் முதலே தடகளத்தில் ஆர்வம் காட்டியவருக்கு குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பு மற்றும் தடகளம் இரண்டையும் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் குடும்ப வாழ்க்கையை தொடர்ந்தவருக்கு தடகளத்தின் மீதான ஆர்வம் குறையாமலேயே இருந்தது.

பின்னர் கணவரின் உதவியோடு தனது 35 வது வயதில் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினார். இயற்கையாகவே ஓட்டத்திறமை பெற்றிருந்த கலைமணி போட்டிகளில் பங்கேற்ற ஆரம்பித்தது முதலே வெற்றியை கண்டார். 100 மீட்டர், 200 மீட்டர் தூரத்தில்  மூத்தோர் பிரிவில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் இவர் வெற்றி பெற்றார்.

இருந்த போதிலும் அடுத்த கட்டப் போட்டிகளில் பங்கேற்பதற்கும், முறையான பயிற்சி மேற்கொள்வதற்கும் மீண்டும் குடும்ப சூழ்நிலை தடையாக அமைந்தது.

டீக்கடை நடத்தும் பதக்க மங்கை

பயிற்சிக்காக டீக்கடை துவங்கிய கலைமணி

தேசிய அளவில், சர்வேதச அளவில் தடகளத்தில் சாதிக்க நினைத்த கலைமணி பயிற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாநில அளவில் பதக்கங்களை பெற்றிருந்தவருக்கு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.

குடும்ப சூழ்நிலையும் வறுமையும் பயிற்சிக்கு தடையாக இருந்தன. இரண்டாவது முறையாக தடகளத்தைப் பாதியில் விடமுடியாது என எண்ணியவர் வருமானத்திற்காக கோவை செல்வபுரம் பகுதியில் ஒரு சாதாரண டீக்கடை ஒன்றை துவக்கினார். அதிகாலை ஓட்டப்பயிற்சியை முடித்துவிட்டு டீக்கடை பணியை துவங்கி விடுவார். மார்கெட்டுக்கு செல்வது, தண்ணீர் சுமப்பது, டீக்கடையை பார்த்துக்கொள்வது என பணிகளை முடித்து விட்டு கணவரை கடையில் விட்டுவிட்டு மீண்டும் மாலையில் பயிற்ச்சியை ஆரம்பித்து விடுவார்.

டீக்கடை நடத்தும் பதக்க மங்கை

இந்நிலையில் தனது டீக்கடையை விரிவுபடுத்த லோன் கேட்டு வங்கியை நாடியவருக்கு இல்லை என்ற பதிலே கிடைத்துள்ளது. சில வங்கிகளில் தான் வென்ற பதக்கங்களைக் காட்டி கடன் கேட்டும் பலனளிக்கவில்லை.

நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள்

பத்து வருடங்களுக்கு முன்பு 100 மீட்டர், 200 மீட்டர்  மற்றும் 800, 1500 மீட்டர்  என குறைந்த தூர ஓட்டங்களில் பங்கேற்றார் கலைமணி. தற்போது நீண்ட தூர ஓட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். 2014 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றும் சூழ்நிலை காரணமாக அவரால் செல்ல முடியவில்லை.

கோவையில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் 800 மீட்டர பிரிவில் தங்கம் வென்று சர்வதேச போட்டிக்கு தேர்வானார். அரசின் கவனம் மூத்தோர் தடகள பிரிவில் அதிகம் இல்லாததால் தேசிய போட்டியில் பங்கேற்க  செய்யும் சொந்த செலவுகள் வீணாகிப்போவதாகவும், இதன் காரணமாக தேசியப் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

டீக்கடை நடத்தும் பதக்க மங்கை

இந்நிலையில் தான் தொலைதூர ஓட்டமான மாரத்தான் போட்டிகளில் ஆர்வம் காட்டி தன் கணவரின் உதவியோடு கடந்த இரண்டு வருடமாக பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

42 கி.மீ. மாரத்தானில் முதலிடம்

குறைந்த தூர தடகளத்தில் பல பதக்கங்களை குவித்து வரும் கலைமணி கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான 42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் 5.17 மணி நேரத்தில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். அதே ஆண்டு கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளத்தில் 800, 1500, 5000 மீட்டர் தூரப் போட்டிகளில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இதுபோன்று தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றிகளை குவித்துவரும் கலைமணிக்கு உரிய உதவிகள் எதுவும் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை.

டீக்கடை நடத்தும் பதக்க மங்கை

வாழ்நாள் முழுவதும் ஓடுவேன்

பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும் சக போட்டியாளர்களுக்கு சவால் விடும் வீராங்கனையாகவே கலைமணி திகழ்கிறார்.

“என் உயிரோட்டம் உள்ளவரை என் ஓட்டத்தை நிறுத்தட மாட்டேன்,” எனக்கூறும் கலைமணி சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு பொருளாதாரம் ஒரு பெரும் தடையாக உள்ளதாக கூறுகிறார்.

சூழ்நிலை காரணமாக சிறு வயதில் சாதிக்க முடியாததை இப்போது சாதித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க நினைப்பதாகக் கூறும் இவர், மூத்தோர் தடகளப் பிரிவில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கோருகிறார் இந்த 45 வயது ‘இளம் பெண்’. -BBC_Tamil

TAGS: