நோயாளிகளுக்கான ‘கழிப்பறை கட்டில்’… நாகர்கோவில் சரவணமுத்து சூப்பர் கண்டுபிடிப்பு!

நாகர்கோவில்: முதியவர்கள், உடல்நலமில்லாதவர்கள் தாங்களே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கழிப்பறையுடன் கூடிய கட்டிலை கண்டுபிடித்துள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த சரவணமுத்து.

முதியவர்கள், உடல்நலமில்லாதவர்கள் போன்றோரின் முக்கிய பிரச்சினையே இயற்கை உபாதைகளைக் கழிப்பது தான். ஒவ்வொரு முறையும் மற்றவர்களின் உதவியை எதிர்நோக்கி காத்திருப்பது நோயை விட மிகுந்த வலியை தரும்.

ஆனால், இனி அப்படி அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் தாங்களாகவே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய கட்டிலைச் செய்து, விற்பனை செய்து வருகிறார் சரவணமுத்து என்ற வெல்டர்.

தென்காசியைச் சேர்ந்தவர் சரவணமுத்து. குடும்பசூழல் காரணமாக மூன்றாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை. எனவே, தந்தையுடன் சேர்ந்து, ஆட்டோ மெக்கானிக் வேலைக்குச் சென்றுள்ளார்.

மற்ற வேலைகள்:

புதிய வகை வாகனங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்ததால், காலப்போக்கில் சரவணமுத்துவிற்கு தொழில் சுணக்கம் கண்டது. எனவே, குடும்பத்துடன் நாகர்கோவிலுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு சென்றதும் மெக்கானிக் வேலையோடு எலக்ட்ரிக்கல் மற்றும் வெல்டிங் வேலைகளையும் அவர் கற்றுக் கொண்டார்.

கூலித்தொழிலாளி:

அப்போது தொடங்கி இப்போது வரை கூலித் தொழிலாளியாகவே தன் வாழ்க்கையை ஓட்டி வரும் சரவணமுத்து, நேரம் கிடைக்கும்போதெல்லாம் புதிய கருவிகளைக் கண்டுபிடிக்கத் தவறுவதில்லை. முறைப்படி படிக்காததால், தன் மனதிற்கு தோன்றும் வகையில் புதிய கருவிகளைச் செய்யும் இவர், பின்னர் அவற்றில் தேவையான திருத்தங்களை மேற்கொள்கிறார்.

பிரபலம்:

இவரது கண்டுபிடிப்புகள் அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பிரபலம். எனவே, தங்களுக்குத் தேவையான பிராஜெக்ட்டுகள் செய்து தர அவர்கள் சரவணமுத்துவை அணுகுகின்றனர். இப்படியாக மற்றவர்களுக்கு தேவையான பொருட்களைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்த போது தான், 2012ம் ஆண்டு அவரது மனைவிக்கு கர்ப்பப்பை ஆபரேசன் செய்யப்பட்டது.

யோசனை:

அப்போது சுமார் இரண்டு வாரங்கள் கட்டிலில் இருந்து எழ முடியாத அவர் மனைவி, இயற்கை உபாதைகளைக் கழிக்க பெரும்பாடு பட்டதை கண்கூடாகக் கண்டார் சரவணமுத்து. தனது அம்மாவின் உதவியையே அவர் எப்போதும் எதிர்பார்த்திருப்பதையும் தெரிந்து கொண்டார். அப்படியானால் இப்படித்தானே படுத்தபடுக்கையாக இருப்பவர்களும் அவதிப்படுவர் என்ற சிந்தனை சரவணமுத்துவுக்கு உண்டானது.

புதிய கட்டில்:

அதனைத் தொடர்ந்து கட்டிலில் படுத்திருப்பவர், மற்றவர்கள் உதவியின்றி தானே இயக்கிக் கொள்ளும் வகையில் புதிய கட்டில் ஒன்றை அவர் கண்டுபிடித்தார். காற்றுவாக்கில் சரவணமுத்துவின் கண்டுபிடிப்பு குறித்து கேள்விப்பட்ட ஒருவர், தனது தாய்க்கும் அதேபோன்ற கட்டில் வேண்டும் என ஆர்டர் கொடுத்தார்.

ரிமோட் மூலம்:

சரவணமுத்து கண்டுபிடித்த கட்டிலின் சிறப்பம்சமே, அதனோடு இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ள கழிப்பறை தான். கட்டிலில் படுத்திருப்பவர் தன் கையருகே உள்ள ரிமோட் மூலம் அதனை இயக்கலாம். இயற்கை உபாதைகளைக் கழித்தவுடன் ரிமோட்டில் உள்ள மற்றொரு பட்டனைத் தட்டினால், பாய்ச்சி அடிக்கப்படும் தண்ணீர் சுத்தமும் செய்து விடுகிறது.

பணப்பற்றாக்குறை:

ராப்பகலாக உழைத்து வரும் வருமானம் சாப்பாட்டிற்கே சரியாக இருப்பதால், இது போன்ற கழிப்பறை கட்டிலை அதிகளவில் உருவாக்கி விற்பனை செய்திட சரவணமுத்துவால் இயலவில்லை. எனவே அரசின் உதவியை அவர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

மாஸ்க்:

இந்தக் கட்டில் மட்டும் என்றில்லாமல், மின்சாரம் இல்லாத சமயங்களில் எழுதுவதற்கு வசதியாக விளக்குடன் கூடிய பேனா, சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்காக காற்றை சுத்தம் செய்து ஃபில்டர் பண்ணி சுவாசிக்கக் கூடிய மாஸ்க், தேங்காய் உரிக்கும் கருவி என பல புதிய உபயோகமானக் கருவிகளைச் செய்துள்ளார் சரவண முத்து.

tamil.oneindia.com

TAGS: