வட இந்தியா: பெரும் பாதிப்பை ஏற்படுத்திய புழுதிப்புயலுக்கான காரணம் என்ன?

கடந்த வாரம் வட இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயலில் சிக்கி குறைந்தது 125 பேர் உயிரிழந்தனர்.

வட இந்தியாவை பொறுத்தவரை புழுதிப்புயல்கள் என்பது இயல்பானதுதான் என்றாலும், இதுபோன்ற மோசமான பாதிப்புகள் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை. எனவே, இந்த சமீபத்திய புழுதிப்புயலுக்கான காரணத்தை பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் செய்தியாளர் நவீன் சிங் கட்கா விளக்குகிறார்.

தாக்கிய நேரம்

மக்கள் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த இரவு நேரத்தில் இந்த மோசமான புழுதிப்புயல் வீசியதே, இது அதிகளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்கான காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கட்டடங்கள் மற்றும் மற்ற அமைப்புகள் இடிந்து விழுந்ததன் காரணமாகவே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த பேரிழப்பிற்கு காற்றின் ஆழ்ந்த கீழ்நோக்கிய நகர்வே காரணமென்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வட இந்தியா: பெரும் பாதிப்பை ஏற்படுத்திய புழுதிப்புயலுக்கான காரணம் என்ன?

காற்றின் நகர்வு

காற்றின் நகர்வு செங்குத்தாக இருந்ததே கட்டடங்கள் பாதிக்கப்பட்டு, சரிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்குரிய முக்கிய காரணங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

வட இந்தியாவில் நிலவும் கடுமையான வெயிலை தொடர்ந்து இந்த புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லைவரை கடும் வெயில் நிலவுகிறது. அதிகபட்சமாக பாகிஸ்தான் நகரமான நவாப்ஷாவில் ஏப்ரல் மாதத்தில் 50.2 டிகிரி செல்சிஸ் வெப்பநிலை நிலவியதாக ஊடக செய்தி ஒன்று கூறுகிறது.

வட இந்தியா: பெரும் பாதிப்பை ஏற்படுத்திய புழுதிப்புயலுக்கான காரணம் என்ன?

அதிக வெப்பநிலை

வடமேற்கு இந்தியாவிலுள்ள வறண்ட நிலப்பகுதியில் உருவாகிய புழுதிப்புயல் தீவிரமடைந்து, மேலும் மேற்கு திசையை நோக்கி நகர்வதற்கு இந்த பிராந்தியத்தில் நிலவி வரும் அதிக வெப்பநிலையே முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால், அது வெறும் புழுதிப்புயலாக மட்டும் செயல்படவில்லை.

கன மழை

புழுதிப்புயல் அது உருவான வடமேற்கு பகுதியிலிருந்து நகர்ந்து பக்கத்து மாநிலங்களாக பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் கிழக்குப்பகுதிகளை நோக்கி பயணிக்கும்போது இடிமின்னலுடன் கூடிய கன மழையாகவும் உருவெடுத்தது.

வங்காள விரிகுடாவிலிருந்து வீசிய காற்று கொண்டுவந்த ஈரப்பதம், மேற்கிலிருந்து வீசிய மணற் காற்றுடன் இணைந்து இந்த மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதிக வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் அப்போது நிலவிய வளிமண்டல அழுத்தம் ஆகியவை இணைந்து இதுபோன்ற புழுதிப்புயல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வட இந்தியா: பெரும் பாதிப்பை ஏற்படுத்திய புழுதிப்புயலுக்கான காரணம் என்ன?

கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட புழுதிப்புயல்களில் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது இதுதான் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பொழிவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாலைவனமாதல்

பல இந்திய மாநிலங்களில் மிகவும் வேகமாக நடந்து வரும் பாலைவனமாதல் குறித்த விடயங்கள் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், தற்போது இந்த மணற் மற்றும் இடியுடன் கூடிய அசாதாரணமான வானிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த நிலப்பகுதியில் கால்வாசி பகுதி பாலைவனமாதலை நோக்கி சென்று வருவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ள நிலையில், நிபுணர்கள் அளிக்கும் தரவுகள் இன்னும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

அதிகரித்து வரும் பாலைவனமாதல் அதிக தீவிரமான மற்றும் பெரும் சேதத்தை விளைவிக்கும் புழுதிப்புயல்களை ஏற்படுத்தக்கூடும்.

காலநிலை மாற்றங்களின் காரணமாக தெற்காசிய பகுதிகளில் வறட்சி வருங்காலத்தில் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

அதன் காரணமாக இதுபோன்ற புழுதிப்புயல்கள் அடிக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். -BBC_Tamil

TAGS: