ரஷ்யா: சர்வதேச கால்பந்து போட்டியில் தமிழக தெருவோர குழந்தைகள்

”கால்பந்து வெறும் விளையாட்டு அல்ல; மைதானத்தில் பலரும் நம்மை சூழ்ந்து மறைக்கும்போது, என்னிடம் உள்ள பந்தை எட்டி உதைத்து, கோல் அடித்து, வெற்றி பெறுவது போல பல சமூகஅவலங்களை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி என்ற இலக்கை அடையவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தது கால்பந்து”

மே மாதம் (10 முதல் 18 வரை) ரஷ்யாவில் மாஸ்கோ நகரத்தில் நடக்கும் சர்வதேச தெருவோர குழந்தைகளுக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடும் அணியின் துணை கேப்டனான 17 வயது ஷாலினியின் வார்த்தைகள் இவை.

உலக அளவில் ‘சேவ் தி சில்ரன்’ அமைப்புடன் சேர்ந்து தெருவோர குழந்தைகளுக்காக இயங்கும் பல்வேறு அமைப்புகள் கைகோர்த்து நடத்தும் சர்வதேச கால்பந்து போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகளுடன் மோதி இறுதிப்போட்டிக்கு போகவேண்டும் என்ற இலக்குடன் உள்ள அவர் கால்பந்தில் தனக்கு ஏற்பட்ட ஆர்வம் பற்றி பிபிசிதமிழிடம் பேசினார்.

‘கால்பந்து விளையாட்டால் வாழ்க்கை மீதான அச்சம் தீர்ந்தது’

”அதிக வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்கு பதிலாக, 13 வயதான என்னை 32 வயதுள்ள ஒரு நபருக்கு திருமணம் செய்ய என் குடும்பத்தினர் முடிவுசெய்தனர். இதனால், வீட்டில் இருந்து வெளியேறி, தெருவோரத்தில் ஆதரவு தேடினேன். கருணாலயா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னை மீட்டு, பள்ளிப்படிப்பை தொடர வைத்தார்கள். முதலில் ஈடுபாடு இல்லை. கால்பந்து விளையாட்டை அறிமுகம் செய்தார்கள்”என்று நினைவுகூர்ந்தார் ஷாலினி.

”இந்த விளையாட்டால் மனஉளச்சல் குறைந்தது; என் வாழ்க்கை மீதான அச்சம் தீர்ந்தது. நான் விளையாட்டு வீராங்கனை; மீண்டும் குழந்தைத்திருமண வலையில் சிக்கமாட்டேன் என்ற உறுதியைக் கொடுத்தது கால்பந்து” என்று மேலும் தெரிவித்தார் ஷாலினி.

கால்பந்து

வாழ்வின் மீதான பயத்தைப் போக்கியதால், கால்பந்து விளையாட்டில் மேலும் ஆர்வத்தை செலுத்தி, இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் பங்குபெறவேண்டும் என்பது அவரது லட்சியம்.

ஷாலினியின் தோழி 18 வயது சங்கீதாவின் டீன்ஏஜ் காதலாக மாறிப்போனது கால்பந்து.

பள்ளிப்படிப்பைத் தொடர விருப்பமில்லாமல் வேலைக்குச்சென்ற சங்கீதாவுக்கு கருணாலயா தொண்டு நிறுவனத்தில் கால்பந்து விளையாட்டில் சேர அழைத்தபோது ஆர்வத்துடன் வந்துசேர்ந்தாள்.

”எனக்கு ஒரே ஒரு கட்டுப்பாடுதான் விதித்தார்கள். படிக்கமுடியாவிட்டாலும், தினமும் பள்ளிக்கூடம் போகவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தாமல் சென்றால், கால்பந்து விளையாடக் கற்றுத்தருவதாக கூறினார்கள். எனக்கு பிடித்தமான, சவாலான விளையாட்டாக கால்பந்து இருந்தது. பள்ளிக்கூடம் செல்ல ஒப்புக்கொண்டேன்,” எனக்கூறும் சங்கீதா தற்போது கல்லூரி படிப்பில் முதலாமாண்டு மாணவி.

சங்கீதா

தண்டையார்பேட்டை பகுதியில் தெருவோரத்தில் வசிக்கும் சங்கீதாவுக்கு தெருவே விளையாட்டு மைதானமாக மாறிப்போனது.

கால்பந்து கற்றுக்கொண்ட சில நாட்களிலேயே மற்ற குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் சங்கீதாவுக்கு ஆர்வம் வந்தது.

”எனக்குள் திறமை இருக்கிறது. படித்து, பரிட்சையில் மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வி இல்லை என்பதை உணர்ந்தேன். நான் சாதிப்பேன் என்ற நம்பிக்கையை கால்பந்து தந்தது. கால்பந்து விளையாட்டில் பல விதிமுறைகளை பின்பற்றுகிறோம், வெற்றிபெறுகிறோம். அதேபோல என்னுடைய வாழ்க்கையிலும் எனக்கான விதிகளை நான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். வெற்றிபெறவேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்,” என்று தெளிவாக பேசுகிறார் சங்கீதா.

மைதானத்தில் அனைவரும் சமம், ஒவ்வொரு நிமிடமும் முக்கியம், விளையாட்டு மைதானத்தில் பந்தை கோல்போஸ்ட்டுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே கால்பந்து விளையாட்டில் லட்சியம் அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை தீர்க்கும் மந்திரங்களைச் சொல்லிக்கொடுத்ததாகவே இந்த குழந்தைகள் கருதுகிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த குழந்தைகளை தன் சுயவிருப்பத்தில் இலவசமாக பயிற்றுவிக்கும் பயிற்சியாளர் ஏ.எல். அட்கின்சனிடம் பேசினோம்.

கால்பந்து
Image captionசங்கீதா

”இந்த குழந்தைகளில் பலர் வெகு சமீபமாகவே கால்பந்து விளையாட்டைக் கற்றவர்கள் என்றாலும், மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். உலகளவிலான போட்டியில் கலந்துகொள்ள இவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. அதேநேரத்தில், இந்த போட்டியில் இருந்து திரும்பிய பிறகும், இவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படவேண்டும். வயதுவந்தவர்கள் பிரிவில் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுபவர்களாக இவர்கள் உயரவேண்டும்,” என்றார்.

சென்னையில் உள்ள தெருவோரக்குழந்தைகளை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்றுள்ள கருணாலயா தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பால் சுந்தர் சிங், ரஷ்யப் பயணம் தெருவோரக் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்வில் பெரிய லட்சியங்களை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்கிறார்.

தெருவோரக் குழந்தைகளைப் பற்றிய கற்பிதங்களை விளக்கிய அவர், ”தெருவோரக் குழந்தைகள் குறித்து சமூகத்தில் எதிர்மறையான பார்வை இந்த சமூகத்தில் உள்ளது. சராசரியான பெற்றோர், தங்களது குழந்தைகள், தெருவோரக்குழந்தைகளுடன் பழகக்கூடாது என்று கூறுவது, இந்த குழந்தைகளுக்கு படிப்பு, விளையாட்டு, எந்த திறமையும் இருக்காது என்ற எண்ணத்தில் தான் பலரும் இருக்கிறார்கள்”என்று அவர் கூறினார்.

பால் சுந்தர் சிங்
Image captionபால் சுந்தர் சிங்

‘இந்த விளையாட்டுப் போட்டியில், கடும் பயிற்சியுடன் இந்திய அணிக்காக இந்த குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்ற அறிவிப்பு பலரின் சிந்தனையை மாற்றும். தெருவோரத்தில் குடும்பங்கள் வசிப்பதற்கு காரணம் அவர்கள் மட்டுமே அல்ல, அரசாங்கமும் ஒரு காரணம், சமூக அவலங்களால் இந்த மக்கள் புறந்தள்ளப்பட்டு வாழ்வதற்காக தினமும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த சர்வதேச அளவிலான போட்டியில் குழந்தைகள் கலந்துகொள்ள வைப்பதன் மூலம் மாற்ற முயற்சிக்கிறோம்,” என்கிறார்.

சர்வதேச அளவில் வெவ்வேறு நாடுகளில் வாழும் குழந்தைகளை இந்தியாவில் இருந்து செல்லும் குழந்தைகள் சந்திப்பதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் சுயமதிப்பீடு அதிகரிக்கும் என்று கூறும் பால் சுந்தர் சிங், ”தெருவோரக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களும் சாதிக்க முடியும். அவர்களால் தாய்நாட்டிற்கு பெருமை தேடித்தர முடியும் என பலருக்கும் அறிவுறுத்தும் நிகழ்வாகவும் இந்த போட்டி அமைந்துள்ளது,” என்றார். -BBC_Tamil

TAGS: