இந்த நவீன உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வளர்ந்துவருகின்றனர். ஆனால் இன்றளவும் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் பெண் குழந்தைகள் கவனிக்கப்படாமல் இருப்பதால் அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் ஆண்டுதோறும் இரண்டு லட்ச பெண்குழந்தைகள் இறக்கின்றனர் என்பது தற்போதைய ஆய்வில் உறுதியாகி உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்திதா சைக்கியியா இந்த ஆய்வை மேற்கொண்டார். இதில் ஆண்டிற்கு 2,39,000 ஆயிரம் (ஐந்து வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள்) சராசரியாக மரணிக்கின்றனர் என்று அதில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக வட இந்தியாவில்தான் மரணமடைகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலுள்ள 35 மாநிலங்களில் (மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள்) 29 மாநிலங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகம் உள்ளது. அதிலும் அதிகமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. உத்திர பிரதேசம் (30.5 சதவீதம்), பீகார் (28 சதவீதம்), ராஜஸ்தான் (25.4 சதவீதம்) மத்திய பிரதேசம் (22.1சதவீதம்) ஆகிய மாநிலங்கள் இதில் முன்னிலையில் உள்ளன என்பது கவலையளிக்கக்கூடியதே.
இந்த ஆய்வு குறித்து நந்திதா சைக்கியியா கூறியது, “பிராந்திய ரீதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் பெண்குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. ஆகையால் இவ்விரு மாநிலங்களிலும் உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கு ஒதுக்கப்படும் நிதியானது அதிகப்படுத்தவேண்டும். மேலும், இந்த ஆய்வின் மூலம் பாலின பாகுபாடு பிரச்சினைகளுக்கு கூடுதல் கவனம் எடுக்கவேண்டும் இந்திய பெண்களின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி என்பது இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது என்று தெரிந்துகொண்டேன்”.
-nakkheeran.in