வீட்டுக் கழிப்பறையுடன் ஒரு செல்பி… இல்லாவிட்டால் மே மாத சம்பளம் கட்.. இது உ.பி. அதிரடி!

லக்னோ : வீட்டில் கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்கப்படாது என உத்தரப்பிரதேசத்தில் அதிரடி உத்தரவு ஒன்றுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட ஆட்சியாளர் சீதல் வர்மா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதாவது, அம்மாவட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருக்கும் கழிவறையைப் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்பது தான் அது.

அதன்படி, தங்கள் வீட்டில் உள்ள கழிப்பறை அருகே ஊழியர்கள் நின்று புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். அத்துடன் கழிப்பறை கட்டியதற்கான அடையாள சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி யாருடைய வீட்டில் கழிப்பறை இல்லை எனத் தெரிய வருகிறதோ அவர்களது மே மாதம் சம்பளம் பிடித்து வைக்கப்படும் என அவர் அறிவித்தார். கழிப்பறையை கட்டி அதற்கான சான்றுகளை சமர்ப்பித்த பின்னரே சம்பளம் விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், அம்மாவட்ட அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிப்பறையுடன் நின்று, புகைப்படம் எடுத்து தங்கள் அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்க, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன் ஒருகட்டமாக உத்தரப்பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: