ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கை..

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதே மாவட்ட ஆட்சியர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.,

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆலை இயங்க அனுமதியளிக்க மாட்டோம் என்று ஒரு அரசாணையே வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலை தற்போது முழுவதும் மூடப்பட்டுள்ளதாகவும், ஆலைக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயல்பு நிலை திரும்பிய பின் முடக்கப்பட்ட இணையதள சேவை மீண்டும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததோடு, ஏற்கனவே ஆலை பெற்றுள்ள அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டு ஆலை மீண்டும் இயங்காமல் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள வங்கி அதிகாரிகளிடம் மக்கள் பணம் எடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாகக் கூறி வங்கிகளையும் ATM-களையும் திறக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், எரிபொருள் விற்பனை நிலையங்களையும் திறக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அவர் பெரும்பாலும் சகஜ நிலை திரும்பி விட்டதாகவும் ஓரிரு நாட்களில் முழுவதும் சகஜ நிலை திரும்பி விடும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: