பணக்கார வீட்டு பிள்ளைகளை டாக்டராக்கவும், ஏழைகளை புறம்தள்ளவும் நீட் தேர்வு? இதை படியுங்கள் தெரியும்

சென்னை: நீட் தேர்வு என்பது, பணக்காரர்களும், உயர்தட்டு மக்களுக்கும் மேலும் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாகவும், ஏழைகளுக்கும், கிராமத்து பின்புலத்தில் முதலாம் பட்டதாரிகளாக வெளியே வரும் மாணவ, மாணவிகளுக்கு கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் கொடும் கரமாகவும் உள்ளது என்ற குற்றச்சாட்டு இப்போது உண்மையாகியுள்ளது.

நீட் என்பது புரியாத புதிர். நகர்ப்புறங்களில் வசிப்போருக்கே வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறச் செய்யும் அந்த படிப்பு கிராமப்புற மக்களுக்கு ஏலியன் போல காட்சியளிப்பதே நிதர்சனம். வளர்ச்சியடையாத கிராமங்களை கொண்ட நமது மாநிலத்தில், நீட் போன்ற தேர்வை அனுமதித்து தமிழக அரசு பெரும் பிழை செய்துவிட்டது.

சமூக நீதி, இட ஒதுக்கீடு போன்றவற்றின் அடிப்படையே வாய்ப்பு இல்லாதவர்களை வளர்த்து முக்கிய ஓடையில் இணைத்து ஓட விடுவதுதான்.

குருகுல கல்வி

நீட்டை பொறுத்தளவில் அது ஒரு குருகுல கல்வி போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே கல்வி, பிறர் கல்வி கற்க முடியாது என்று மறுக்கப்பட்ட காலத்தை அது நினைவுபடுத்துகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு எல்லோருக்கும் கல்வியை சென்று சேர உதவியது. ஏழைகளும் கல்விகூடம் போக வேண்டும் என்றுதான் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் காமராஜரின் கனவு இன்று தூள் தூளாக்கப்பட்டுள்ளது.

கிராமத்து மாணவி

உதாரணம் இதுதான். விழுப்புரம் மாவட்டம் சேத்துப்பட்டையில் உள்ள பெருவளூர் ‘கிராமத்தைச்’ சேர்ந்தவர் பிரதீபா. இவரது தந்தை சண்முகம் ‘விவசாயி’ தாய் அமுதா ‘கூலி தொழிலாளி’. கிராமம், விவசாயம், கூலித்தொழில் இதுபோதுமே நீட் இவர்களை புறம்தள்ள. அதுதான் நடந்தது. பிரதீபா, பத்தாம் வகுப்பின் பொதுத் தேர்வில் 495 மதிப்பெண் பெற்று அசத்தியவர். பள்ளியே அவரை கொண்டாடியது. வறுமை துரத்தியபோதும் விடாத முயற்சியோடு படித்த பிரதீபா 12ம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றார். டாக்டராக தகுதியுள்ள மதிப்பெண்தான் இது. ஆனால், 2வது முறையாக இவ்வாண்டு நீட் எழுதிய பிரதீபாவுக்கு 39 மதிப்பெண்களே கிடைத்தன.

பயிற்சி வகுப்பும் சரியில்லை

கிராம பின்புலம் கொண்ட பிரதீபா, வறுமைக்கு நடுவேயும் தனியார் கல்லூரி நடத்திய நீட் பயிற்சிவகுப்பில் பங்கேற்றுள்ளார். ஆனால், கிராமத்து பகுதியில் உள்ள பயிற்சி வகுப்பு மையங்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல்தான் செயல்படுகின்றன. எனவே அதில் பயின்ற பிரதீபா குறைவான மதிப்பெண்தான் எடுக்க முடிந்தது. இதனால் மனது வெறுத்துப்போன பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் டாக்டர்

அதேநேரம், மற்றொரு பக்கத்தையும் பாருங்கள். அப்போதுதான் இந்த நீட் தேர்வு யாருக்கானது என்பதை புரிந்து கொள்ள முடியும். நீட் தேர்வில், தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் இவர் 12வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது அம்மா, அப்பா இருவருமே டாக்டர்கள். கூலி வேலை பார்க்கும் கல்வியறிவு இல்லாத பெற்றோரை கொண்ட பிரதீபாவுக்கும், டாக்டர்களை பெற்றோராக கொண்ட ஒரு மாணவிக்கும் கிடைக்கும் வழிகாட்டுதல்களின் வேறுபாடுகள் குழந்தைக்கு கூட தெரியும்.

நகர்ப்புற வசதி

கீர்த்தனா பயின்றது சென்னை அசோக் நகரிலுள்ள ஆகாஷ் கோச்சிங் மையத்தில். நகர்ப்புற பயிற்சி மையங்களின் வழிகாட்டுதல்கள் கீர்த்தனாவுக்கு கூடுதல் கதவை கண்டிப்பாக திறந்துவிட்டுள்ளது. என் தாய், தந்தை போல நானும் மருத்துவராக வேண்டும் என்பதுதான் எனது கனவு என்று கூறும், கீர்த்தனாவுக்கு கண்டிப்பாக நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள வேண்டும். ஆனால் அசோக் நகரில் படித்த டாக்டர் தம்பதிகளின் மகளான கீர்த்தனா போலவே, ஆரல்வாய்மொழியில் விவசாய பின்னணி கொண்ட ஒரு மாணவிக்கும், ஆரவல்லி பகுதியில் வாழும் ஒரு ஒரு பழங்குடியின குடும்பத்து பெண்ணுக்கும் சமமான வாய்ப்பு தரப்படுவதுதானே உண்மையான கல்வி முறையாக இருக்க முடியும் என்பதே கல்வியாளர்கள் கேள்வி.

உயர்தட்டு மக்கள்

மாநில கல்வி முறையில், ராப்பகலாக படித்து பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் எடுத்தும் திடீரென சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகளை கேட்டு அதில் சிறந்த மதிப்பெண் எடுத்தால்தான் நீ டாக்டராக முடியும் என கூறுவது எவ்வளவு பெரிய வலி. சிபிஎஸ்இ போன்ற கல்வி திட்டத்தில் பயில்வதில் பெரும்பாலானோர் உயர்தட்டு மக்கள்தானே, அப்படியானால், வருங்காலத்தில் ஏழைகளும், கிராமப்புற மாணவ, மாணவிகளும் டாக்டராக வெளியே வரகூடாது என்ற நோக்கம்தான் இதில் உள்ளதா?

நகரங்களில் வாய்ப்பு அதிகம்

சென்னை பழைய வண்ணார்பேட்டையிலுள்ள கே.சி.சங்கரலிங்க நாடார் என்ற அரசு உதவி பெறும், மேல்நிலைப் பள்ளியில் பயின்ற, சரண் என்ற மாணவர், நீட் தேர்வில் 413 மதிப்பெண்கள் பெற்றுள்ளாரே என்ற கேள்வி எழலாம். அந்த பள்ளியிலேயே கொடுத்த நீட் பயிற்சியை பெற்றுதான் தான் இவ்வளவு மதிப்பெண் எடுக்க முடிந்ததாக கூறுகிறார் சரண். ஆனால், இவரும் சென்னையை சேர்ந்தவர் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஏழைகளும், கிராமப்புற மாணவ, மாணவிகளும் டாக்டராக இனி 2 வழிகள்தான். ஒன்று நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டும். அல்லது, தமிழக பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல மாற்றியமைக்க வேண்டும்.

tamil.oneindia.com

TAGS: