சரிவில் தமிழக சிறு, குறு தொழில்கள்: சீராக்க என்ன வழி?

தமிழக சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 2016-17ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2 லட்சத்து 67,310 ஆக இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2017-18ஆம் ஆண்டில் 2 லட்சத்து 17,981 ஆக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் குறைந்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழில் முதலீடும் கடந்த ஓராண்டில் 36 ஆயிரம் கோடியில் இருந்து 25 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக குறுகிய காலத்தில் இத்தொழில் துறையின் சரிவால் 5 லட்சத்து 19,075 பேர் வரை வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும், கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 இருந்த வேலைவாய்ப்பு எண்ணிகையில் குறைந்து 2017-18ம் நிதியாண்டில் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்துள்ளதாகவும் தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை கடந்த ஓராண்டில் கண்டுள்ள மிகக் கடுமையான சரிவு வரலாறு காணாத ஒன்று என்றும், தமிழகத்தில் பெரும்பான்மை தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக திகழும் சிறுதொழில் நிறுவனங்களைக் கூட அரசு காப்பாற்றத் தவறியது கண்டிக்கத்தக்கது என பாட்டாளிமக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சிறு, குறு தொழில்கள்

ஒரே ஆண்டில் 49,329 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதும், இதனால் 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை இழப்பு என்பது எளிதாக ஒதுக்கிவிட்டு செல்லும் அளவுக்கு சாதாரண பின்னடைவு அல்ல. கடந்த 10 ஆண்டுகளில் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தொழில் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறதே தவிர, ஓராண்டு கூட குறைந்ததில்லை, ஆனால் கடந்த ஆண்டுகளில் ஜிஎஸ்டி சேவை வரியினால் ஏற்பட்ட தாக்கம் மிக அதிகம் என்கின்றனர் சிறுகுறு தொழில் துறையினர் மற்றும் வணிகர்கள் .

வருவாய் இழப்பும் வேலையில்லா திண்டாட்டமும்

கோவை மாவட்டத்தில் உள்ள தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், “புதிய தொழிற்சேவை வரி மற்றும் மின்னணு முறை வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும் , ஆரம்பகட்டத்தில் ஏற்படும் சிறுசிறு தவறுகளால் அதிகம் பாதிப்படைவது சிறு குறு தொழிலாளர்களும் விவசாயிகளும் மட்டுமே,” என்கிறார்.

சிறு, குறு தொழில்கள்

“சரிவிற்கு ஜி.எஸ்.டி சேவை மற்றும் ஈ.வே.பில் முறைக்கும் கணிசமான பங்களிப்பு உண்டு. முறையான வகையில் நேர்மையாக வணிகம் நடத்தப்பட உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில் சில சமயங்களில் இணையத்தில் ஏற்படும் தவறுகளால் சிறுஅளவில் முதலீடு செய்த உற்பத்தியாளர்கள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர், உடனடியாக நிலையை சரி செய்ய இயலாமல் வருமானத்திற்கு வழிவகுக்கும் வகையில் வேறு வேலைக்கு செல்லும் அவலநிலை நிகழ்கின்றது,” என தெரிவித்தார்.

தேவையான மூலப்பொருட்கள் சரிவர கிடைப்பது இல்லை என்றும் நெசவு, ஜவுளிக்கு பெயர்போன ஈரோடு மாவட்டத்தில் மட்டும் வருடத்திற்கு 20ஆயிரம் கோடி விற்பனை நடந்து வந்த நிலைமாறி தற்போது 6 கோடியாகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டுகிறார் ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் வணிகர் சங்கத்தலைவர் சிவநேசன்.

இதனால் 30 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு தற்போது வெறும் 7 ஆயிரம் பேருக்கானதாக மாறிவிட்டது, இதனால் வேலைவாய்ப்பு குறைந்து வருமானம் பாதிக்கபட்ட நிலையில், கிடைக்கும் வேலைக்கு செல்கின்றனர், வேலை தெரிந்த நபர்களும் தங்களுக்கு தெரியாத வேலைகள், 100நாள் வேலை திட்டம், கட்டுமான தொழில் போன்றவற்றிக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்தார் சிவநேசன்.

“தொழில் நிறுவனம் துவங்க தேவைப்படும் அனைத்து தரச்சான்றிதழ்களும் பெற அதிக கால தாமதமாகிறது. இவ்வாறான காலதாமதம் பல லட்சங்களை உள்ளடக்கிய தொழில்கள் துவங்கியபின் சமுக சூழலை பொதுமக்களின் நிறைகுறைகளாக எழுப்பப்படும் கோரிக்கைகளால் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டிய காரணங்களால்தான் சிறுதொழில் நிறுவனங்களின் முதலீடுகள் தமிழகத்தை விட்டு வெளியேறியுள்ளன.”

சிறு, குறு தொழில்கள்

“இவ்வாறான நிலைக்கு மாற்றாக தொழிசாலைகளுக்கு அரசு தனியிடங்கள் ஒதுக்குதல், தொழில் நிறுவனம் துவங்க தேவைப்படும் அனைத்து அனுமதிகளையும் (licenses) ஒரே தினத்தில் தருதால் போன்ற மாற்று வழிகளை அரசு ஏற்படுத்தி தருவதன் மூலமும் , மேலும் உள் மற்றும் வெளிமாநிலங்கள் சார்பான சிறுகுறு தொழில் நிலையை மேலும் சரியாமல் பார்க்க முடியும்,” என தனது தரப்பு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மாநிலத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, தொழில் துறையின் நியாயமான சவால்களை தீர்க்கக் கூடிய வகையில் அரசின் நடவடிக்கைகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மேலும் சீர்குலையாமல் பாதுகாக்க முடியும் என்று தொழில் துறையினர் கருதுகிறார்கள். -BBC_Tamil

TAGS: