வறுமை.. ஏழ்மை.. உழுவதற்கு மாடு இல்லை.. மகள்களை ஏரில் பூட்டி உழுத உ.பி. விவசாயி

லக்னோ: வறுமை காரணமாக விவசாயி ஒருவர் ஏரில் மாடுகளுக்குப் பதில் தன் இரு பெண்களையும் பூட்டி நிலத்தை உழுதுவரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாரத நாடு ஒரு விவசாய நாடு என்றுதான் பெயர். நம்ம ஊர் முதல் வடமாநிலங்கள் வரை பெருமளவு விவசாய நிலங்கள் பாளம் பாளங்களாக வெடித்துதான் காணப்படுகின்றன. இதனால் வயல்வெளிகள் எல்லாம் மழையின்றி காய்ந்து சருகுகளாக காணப்படுகின்றன. பல மாநிலங்களில் விவசாயிகளின் நிலைமையை விவரிக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய பொருட்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை. பலர் வறுமையில் உழன்று பசியால் சிக்கி தவித்து வருகின்றனர். பலர் நிலங்களில் வறுமையால் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் உச்சக்கட்ட கொடூரம் உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

படகான் கிராமத்தை சேர்ந்தவர் ஆஷிலால் அஹர்வார். இவர் ஒரு விவசாயி. ஏற்கனவே பருவமழை கோளாறு, மழை இல்லை, தாண்டவமாடும் வறட்சி, வறுமையின் கோரமுகம்.. இதில் அவருக்கு 6 பெண்கள் வேறு. அதில் 4 பேருக்கு எப்படியோ கடன்களை வாங்கி திருமணம் முடித்து கொடுத்துவிட்டார். மற்ற 2 பெண்களும் படித்து கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் 8-ம் வகுப்பு, மற்றொரு பெண் 7-ம் வகுப்பு.

அந்த 2 பெண்களுக்கும் போட்டுக் கொள்ள நல்ல துணி கூட இல்லை. அதனால் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் பரிதாபம் பார்த்து இந்த குடும்பத்தாருக்கு பலவழிகளில் உதவி செய்து வருகின்றனர். விவசாயிக்கும் வேறு தொழிலும் தெரியாது. தெரிந்ததோ விவசாயம் மட்டும்தான். இதனால் நிலத்தை உழுவதற்கு டிராக்டர் வாங்குவதற்கு போதிய பணம் இல்லை. டிராக்டர் என்று இல்லை… உழுவதற்கு மாடுகள் வாங்ககூட பணமின்றி தவித்து வருகிறார்.

ஆனாலும் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிர்பந்தம் காரணமாக, தன் 2 மகள்களையும் மாடுகளுக்கு பதிலாக, நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தி வருகிறார். பள்ளி நாட்கள் போக விடுமுறைகளில் மகள்கள் தன் அப்பாவுக்கு உதவியாக நிலங்களை மகள்கள் உழுது உதவி வந்திருக்கிறார்கள். தற்போது படிக்க வைக்க பணம் இல்லாததால் படிப்பையும் பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். தன் அப்பாவுக்கு ஒன்றரை லட்சம் வரை கடன்கள் இருப்பதால், இப்படி ஏர்பூட்டி உதவி செய்வதாகவும், சீக்கிரமாக பருவமழை பெய்துவிடும் என்றும் மகள்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரின் பிஆர்ஓ ஆஷிஸ் சர்மா கூறுகையில், விவசாயிக்கு தேவையான நிதி உதவி செய்யப்படும் என்றும், படிக்கும் பெண்களை இப்படி ஏர் பூட்ட பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் உத்திரபிரதேசத்திலேயே இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது. ஆட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டதும், விவசாய கடன்கள் அனைத்தையும் பாஜக ரத்து செய்தது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும் விவசாயிகளின் நிலைமை மாறியதா என்றால், அது கேள்விக்குறிதான்!

tamil.oneindia.com

TAGS: