மகாராஷ்டிர மாநிலம் துளே மாவட்டத்தில், குழந்தை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து 5 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
பரத் போசேல், தாதாராவ், ராஜு, அகானு, பரத் மாவ்லே ஆகிய ஐந்து பேரும் துளே மாவட்டத்தின் ரயீன்பேடா கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியின் படத்தின் கீழேதான் அடித்துக்கொல்லப்பட்டனர்.
நேற்று இந்த அலுவலகத்தின் அறை ரத்த சகதியாக இருந்தது. இன்று அறை சுத்தப்படுத்தப்பட்டிருந்தாலும், ரத்த கறை இன்னும் உள்ளது. ரயீன்பேடா கிராமம் தற்போது ஆள் நடமாட்டம் இல்லாமல் காட்சியளிக்கிறது. நேற்று ஐந்து அப்பாவிகளின் அலறலைக் கேட்ட இக்கிராமம், இன்று அமைதியாகக் காட்சியளிக்கிறது.
இறந்தவர்கள் ஐந்து பேரும் தெற்கு மகாராஷ்டிராவில் உள்ள சோலாபூரை சேர்ந்த நாடோடி சமூகத்தினர். பிச்சை எடுத்துப் பிழைப்பதற்காக தங்கள் குடும்பங்களுடன் வடக்கு மகாராஷ்டிராவிற்கு வந்துள்ளனர். துளே மாவட்டத்தின் வெளியே கூடாரம் அமைத்து இவர்கள் வாழ்ந்துவந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினர் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்களிடம் பேசினோம்.
இறந்துபோன பாரத் போசேலின் மனைவி நர்மதா,” அன்று காலை 9 மணிக்கு எனது கணவரும், மற்ற நான்கு பேரும் பிச்சை எடுக்க சென்றனர். மதியம் அவரது போனுக்கு கால் செய்தபோது, ஸ்விட்ச் ஆப் என வந்தது. அவர்கள் அனைவரும் அடித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் பற்றி மாலை 4 மணிக்கு எங்களுக்குத் தகவல் வந்தது” என்கிறார்.
”இது போன்ற சம்பவம் எங்களுக்கு நடந்தது இதுவே முதல் முறை. பிச்சை எடுக்க இங்கு வந்துள்ளோம். இதுவே எங்களது பாரம்பரிய தொழில்.” என்கிறார் இறந்தவரின் உறவினரான ஜகன்நாத்.
இந்த குடும்பங்கள் தற்போது கூடாரங்களை அகற்றிவிட்டு, சொந்த ஊருக்கே செல்ல உள்ளனர்.
இவர்கள் நாத் பந்தி தவாரி கோசவி எனும் நாடோடி பழங்குடியினர். இவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று, பிழைப்புப்பாக பிச்சை எடுப்பார்கள்.
”இந்த சம்பவத்தில் 23 பேரை கைது செய்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு ஐந்து பேரும் கிராமத்திற்கு வந்துள்ளனர். சில கிராம மக்கள் அவர்கள் மீது சந்தேகப்பட்டு, கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களின் பதில் திருப்திகரமாக இல்லாததால், அவர்களை அறைக்கு அழைத்துச் சென்று கிராம மக்கள் அடித்துள்ளனர்” என துளே மாவட்ட எஸ்.பி ராம்குமார் கூறுகிறார்.
போலீஸாரின் நடவடிக்கையால் கிராமமே காலியாக உள்ளது. நம்மிடம் பேசுவதற்கு யாரும் இல்லை.
இந்தியாவின் மற்ற பகுதிகளை போலவே மகாராஷ்டிராவிலும் குழந்தை கடத்தல் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. மகாராஷ்டிராவின் நாசிக்கிலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. -BBC_Tamil