திருப்பூர்: திருப்பூரில் யூடியூப் உதவியுடன் பிரசவம் பார்த்தபோது மனைவி இறந்த சம்பவத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி கிருத்திகா. தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இவர்களுக்கு ஏற்கெனவே 5 வயதில் ஹிமானி என்ற பெண் குழந்தை உள்ளது. இதைத் தொடர்ந்து கிருத்திகா மீண்டும் கர்ப்பமானார்.
வீடியோ
தம்பதிக்கு இயற்கை மருத்துவத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. கிருத்திகா கர்ப்பமான போதிலிருந்தே வீட்டிலிருந்து குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி என்பது தொடர்பான வீடியோக்களை இவர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.
பிரசவம்
மேலும் கிருத்திகா எந்த மருத்துவரிடமும் செக் அப்புக்கு செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த 22-ஆம் தேதி கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திகேயன், அவரது நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா மற்றும் கார்த்திகேயனின் தாய் காந்திமதி ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர்.
பலி
அப்போது கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அவரது வயிற்றில் இருந்த நஞ்சுக் கொடி வெளியே வரவில்லை. இதனால் கிருத்திகா மயக்கமடைந்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸின் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் கிருத்திகா. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் கிருத்திகா உயிரிழந்தார்.
கணவர் கைது
தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிருத்திகாவின் தந்தை சுப்பிரமணியன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கிருத்திகாவின் மரணம் இயற்கைக்கு எதிரான மரணம் என்று போலீஸார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். பிரசவம் என்பதே மருத்துவமனையிலும் பார்த்தாலும் மறுஜென்மம் போன்றது இந்த லட்சணத்தில் வீட்டிலேயே இவர்கள் பிரசவம் பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கார்த்திகேயனுக்கு உதவியாக இருந்த பிரவீன், லாவண்யா, காந்திமதி ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.