தமிழகத்தில் விவசாயிகளின் பெயரில் 60 கோடி ரூபாய் மோசடி.. 15 பேர் கொலை.. குற்றம் நடந்தது என்ன..?

விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகளின் பெயரில் 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்த 3 முதலைகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உண்மை கசிந்து கொண்டிருந்த சூழலில் கூலித் தொழிலாளிகள் 15 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய கமுக்கப் புலனாய்வில் மறைந்து கிடந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

ஏமாற்றிக் கையெழுத்து

வேல்முருகன் மற்றும் செண்பகம் ஆகியோர் ஆர்.எம்.பி.டி என்ற பெயரில் பருப்பு ஆலை ஒன்றை விருதுநகரில் நடத்தி வருகின்றனர். திடீர் பணக்காரர்கள் ஆகும் முயற்சியில் இறங்கிய அவர்கள், ஓய்வூதியம் வாங்கித் தருவதாகக் கூறி விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகள் 169 பேரிடம் கையெழுத்துப் பெற்றுள்ளனர்.

விவசாயிகளுக்கு நாமம்

சந்தை உற்பத்தி வணிகத்தைத் தொடங்கவுள்ளதாகக் கூறி ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியில், தலா 25 லட்சம் முதல் 40 லட்சம் வரை கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடன் தொகை 169 பெயரில் தொடங்கப்பட்ட தற்காலிகமாகத் தயாரிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு வந்து சேர்ந்தது. அதனை மொத்தமாகச் சுருட்டிய வேல்முருகனும், செண்பகனும் விவசாயிகளின் நெற்றியில் நாமத்தைச் சாத்தியுள்ளனர்.

குவிந்த புகார்கள்

அப்போதுதான் நாகமுத்து என்ற விவசாயிக்கு 96 லட்சத்தைத் திருப்பிச் செலுத்துமாறு எஸ்.பி.ஐ.வங்கி நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகமுத்து தலைமறைவானார். வங்கி மோசடி குறித்து 400 க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. இதே போல் தேனி மாவட்டத்திலும் குற்றச்சாட்டுக்கள் குவிய தொடங்கின.

குற்றவாளிகள் கைது

அவசர அவசரமாக நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை, வேல்முருகனையும், செண்பகத்தையும் கைது செய்தது. உடந்தையாக இருந்த சன்னாசி என்பவனும் கைது செய்யப்பட்டான்.

நடவடிக்கை இல்லை

இந்த நிலையில் தான், வங்கிக் கடன் வாங்கியதாகக் கூறப்படும் 15 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். 6 மாதங்களில் இதனைப் பேர் உயிரிழந்த நிலையில், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையே எடுக்காமல் இருந்து வருகிறது காவல்துறை. கடந்த மார்ச் மாதம் கணேசன் என்பவர் கொடுத்த புகாரில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மௌனம் காத்து வருகிறார்.

60 கோடி ரூபாய் மோசடி, மர்மமான முறையில் 15 பேர் கொலை. எனக் குற்றப்பட்டியல் நீள்கிறது. மோசடியின் பின்னணி யாருக்கு தொடர்பு என்பதெல்லாம் புதிராகவே இருக்கிறது. என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது அரசு என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. மண்ணை வாரி தூற்றும் அங்கமுத்து மனைவி மகேஷ்வரிக்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

tamil.goodreturns.in

TAGS: