‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!’ இந்த கிராமத்து சொலவடை, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையின் சமீபத்திய செயல்பாட்டுக்கு மிகவும் பொருந்திப் போகிறது. விமான பயணத்தின்போது, பா.ஜ.க.வுக்கு எதிரான சோபியாவின் முழக்கத்தை, ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக்கிவிட்டார்.
இதோ இன்னொரு பெண் கிளம்பியிருக்கிறார். அவர், வேறு யாருமல்ல! மதுவுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்திவரும் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினிதான்!
‘சோபியா விமானத்தில்தானே கோஷம் போட்டார். நான் பா.ஜ.க. தலைமை அலுவலகத்திலேயே கோஷம் போடுகிறேன்’ என்னும் உந்துதலோடு, தன்னுடைய தந்தை ஆனந்தன் மற்றும் சகோதரி நிரஞ்சனா ஆகியோருடன் கமலாலயம் நோக்கிச் சென்றார். அப்போது, ‘சர்வாதிகார BJP ஒழிக!’ என்றும், ‘பாசிச BJP ஒழிக!’ என்றும், ‘டெல்லியில் மோடி வீட்டின் முன்பு போராடியதற்காக கொலை மிரட்டல் விடுத்து மிக இழிவான தனிமனித தாக்குதலில் ஈடுபடும் பார‘தீய’ ஜனதா கட்சியைக் கண்டித்துப் போராட்டம்’ என்றும் இவர்களின் கையில் பதாகைகள் இருந்தன. இவர்களை பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்குச் செல்லவிடாமல், வழியிலேயே தி.நகர் போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்திலும் பா.ஜ.க.வுக்கு எதிரான அலை மிக வேகமாகவே வீசுகிறது!
-nakkheeran.in