தமிழ் நாட்டு அரசியல் செய்திகளுக்கு இரண்டு பக்கங்களை ஒதுக்குகின்றார் மலேசிய தமிழ்ப் பத்திரிக்கையாளர்!.
அந்த செய்தியைப் படிக்க இன்று இருப்பது 60 – 70 வயதானவரே. அதற்கும் கீழ் உள்ளோர் இன்றைய தமிழ் நாட்டு அரசியலைப் பற்றி பொதுவாகக் கருதுவதேயில்லை.
ஒரு காலத்தில் ஆளுங்கட்சியில் இருந்த ம.இ.க. செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து செய்திகளைப் பதிவிட்டு வந்தனர். அன்று ம.இ.க. வாரிசுகள் தவறாமல் தமிழ் நாளிதழை வாங்கிப் படிப்பார். அவர்களின் கட்சி செய்தி மட்டுமே முக்கியமானவையாக அவர்கள் கருதினார். இன்று அந்த கட்சி செயலிழந்ததால் அக்கட்சி வாரிசுகளும் காசு கொடுத்து தமிழ் பத்திரிக்கை வாங்க மனக்கெடுகின்றார்.
இனி நம்பிக்கை கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எவையும் இந்தியரைச் சார்ந்த கட்சிகள் இல்லை. இப்பொழுதுதான் திரு. வேதமூர்த்தி அவர்கள் இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு ஒர் அரசியல் கட்சியை துவஙக இருப்பதாக அறிவித்துள்ளார். இது அரசியலில் அவருக்கு மறுபிறப்பு. ஆனால் அவரும் தற்சமயம் வரை பொதுசன ஊடங்களை நம்பியே தம் பிரச்சார உக்திகளைக் கையாண்டு வருகின்றார்.
நம்பிக்கை கூட்டணியில் இருக்கும் பல இந்திய தலைவர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி இல்லை. தமிழில் பேச மட்டுமே தெரிந்து வைத்துள்ளனர். அப்புறம் அவர்கள் எதற்காக தமிழ்ப் பத்திரிக்கையை நாட வேண்டும்?
பிரச்சணைகள் பல. அது தமிழ்ப் பத்திரிக்கை முதலாளிகளுக்கும் தெரியும்.
அப்படியானால் இந்நாட்டில் தமிழ் வாழ தமிழ் வாசிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க பல்வேறு சமூக இயக்கங்கள் முன் வர வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி தமிழ்ப் பத்திரிக்கைகளின் செய்தி தரமும் உயர்வடைய வேண்டும். தத்தம் பத்திரிக்கை உரிமையாளர்களின் கொள்கைக்கு உட்பட்டு அவர்கள் விரும்பி போடும் செய்திகள் மட்டுமே வாசகர் படிக்க வேண்டுமானால் அதற்கு நாங்கள் எதற்காக எங்கள் பணத்தைச் செலவளிக்க வேண்டும்? வாசகர்களுக்கு பொதுசன ஊடகங்கள் முதல் பல்வேறு இணைய செய்தித் தளங்கள் இருக்கும்போது தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியரியர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்ட செய்திகள் எதற்காக?
இனி மலேசிய இந்தியர்களின் நலனைப் பேன செய்திகளைப் போடவும். தமிழ் நாட்டு அரசியலைக் குறைத்து அப்பக்கங்களில் மலேசிய வாழ் இந்தியர்களின் தேவைகளை முன் நிறுத்தி செய்திகளைப் பகிர்ந்திட ஆவண செய்யுங்கள். குறிப்பாக தமிழர்களிடையே அரசியல் முதிர்ச்சியும் மேம்பட்ட சமூகச் சிந்தனை மாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடிய சிந்தனையாளர்களின் பதிவுகள் தொடர்ந்து இடம்பெற முன்னுரிமை கொடுங்கள். அறிவார்ந்த தமிழர் இத்தகையச் செய்தியைத் தாங்கி வரும் தமிழ்ப் பத்திரிக்கைகளை வாங்க முன்னுரிமைக் கொடுப்பார்.
ஒவ்வொரு தமிழ் நாளேடுகளில் சமயப் பிரிவுக்குத் தலைமைத் தாங்கும் உதவி ஆசிரியர்களுக்கு அடிப்படை சமய அறிவே இல்லை. ஏதோ அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக எவரெவரோ மூட நம்பிக்கைகளைக் கொண்ட புராணக்கதைகளையே மையமாக வைத்து எழுதும் கட்டுரைகளை பிரசுரிப்பதை நிறுத்துங்கள். தமிழர் சமய முதிர்ச்சி பெற நம்பிக்கை கடந்த அறிவை வளர்க்கும் சமய விளக்கக் கட்டுரைகளைப் பிரசுரிக்க ஆவண செய்யுங்கள். இதற்காகவாவது சமயத்தை பின்பற்றி நிற்கும் தமிழறிவு கொண்ட தமிழர் தமிழ்ப் பத்திரிக்கை வாங்குவார். அதை விடுத்து புத்தம்புது படையலாக வரும் புதுப்புது குருமார் கதைகளைப் பரப்பி தமிழரை நரகக்குழியில் தள்ளுவதை நிறுத்துங்கள்.
இந்த சுடுகாட்டு கோயில் பிரச்சனைகளை மட்டும் எழுதுவதில் இருக்கும் ஆர்வத்தைக் குறையுங்கள். அவை எல்லாம் இக்கால பிரச்சணையல்ல. கல்வி பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்கள் முன்னேற வழி இருப்பின் அதனைப் பதிவிடுங்கள்.
இப்படிப்பட்ட மாற்றங்கள் வந்தால் எம்மைப் போன்றவரும் தினசரி தமிழ்ப் பத்திரிக்கையை வாங்கிப் படிப்போம்.
–தேனீ