மரம் பெ.தங்கசாமி.. இந்த பெயரைக் கேட்டால் தமிழகத்தில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் மரங்கள் மீது ஆர்வமுள்ள அத்தனை பேருக்கும் தெரியும். அமெரிக்காவில் இருந்து மரம் வளர்ப்பு பற்றிய ஆய்வுக்கு தமிழகம் வந்த மாணவர்கள் மரம் தங்கச்சாமி வீட்டுக்கு போய் தங்கி இருந்து ஆய்வு செய்தனர். அதனால் தான் அமெரிக்காவில் தி.பார்மர் ஆப் சட்ஸ் என்று மரம் தங்கச்சாமியை அட்டைப்படமாக வைத்து ஆங்கில புத்தகம் எழுதினார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் நண்பர். இன்று அரசு, தனியார், நிறுவனங்கள், பள்ளிகளில் மரக்கன்றுகள் வளர்க்க வித்திட்டவரும் தங்கச்சாமியே..
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்கடி கிராமத்தைச் சேர்ந்த பெ.தங்கச்சாமி.. 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது விவசாய நிலத்தில் செய்த விவசாயம் பொய்துப்போனதால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் ஊரைவிட்டு ஓடுவதா? தற்கொலை செய்து கொள்வதா என்று தவித்த நேரத்தில் விவசாய நிலத்தை தரிசாக போட்டார். அந்த தரிசு நிலத்தில் நின்ற சில மரங்களில் அடைக்கலமான பறவைகளும், குருவிகளும் கொண்டு வந்து போட்ட விதைகள் முளைத்து மரக்கன்றுகள் வளரத் தொடங்கியது. வறட்சி ஏற்பட்ட காலத்திலும் மரக்கன்றுகள் அப்படியே நின்றது. வறட்சியால் கருகும் பயிர்களைவிட வறட்சியை தாங்கும் மரங்களை வளர்க்கலாமே என்ற முடிவுக்கு வந்தார் அந்த விவசாயி. வீட்டை சுற்றியுள்ள தனது விளை நிலத்தில் செடி கொடிகளுடன் மரக்கன்றுகள் வளர்வதை தடுக்கவில்லை அப்படியே விட்டார். வளர்ந்தது. கூடுதலாக பல மரக்கன்றுகளையும் கொண்டு வந்து வைத்தார். வறட்சியை தாங்கி வளர்ந்தது. சில ஆண்டுகளில் தன் தோட்டத்தில் வளர்ந்த மரங்களை விற்கு விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைத்தார். மரம் வளர்ப்போம் என்ற எண்ணத்திற்கு வந்தார்.
அதன் பிறகு மரம் வளர்ப்பை விவசாயிகளிடம் விழிப்புணர்வாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர்.. முன்னால் பாரதப்பிரதமர் இந்திராக் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தில் அதன் நினைவாக வீட்டு வாசலில் ஒரு மரக்கன்றை நட்டார். அதன் பிறகு எம்.ஜி.ஆர், ராஜிவ்காந்தி என்று நாட்டில் எத்தனை தலைவர்கள் மறைந்தார்களோ அவர்களின் மறைந்த நாட்களிலும் பிறந்த நாள், நினைவு நாட்களிலும் தனது தோட்டத்தில் மட்டுமின்றி அருகில் உள்ள பள்ளிக் கூடங்களில் மரக்கன்றுகளை நட்டு மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். இன்று அவர் வீட்டில் இந்தியாவில் மறைந்த அத்தனை தலைவர்களுக்கும் ஒரு மரம் நிற்கிறது.
அவர் கலந்து கொள்ளும் திருமணம், காதணி, போன்ற சுப நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பள்ளி, விழாக்கள் அரசு விழாக்கள் எங்கே நடந்தாலும் முதலில் அங்கே சென்று மணமக்களுக்கு மரக்கன்றுகளை பரிசு கொடுப்பதுடன் மரக்கன்றுகளை நட்ட பிறகு நிகழ்ச்சிகளை தொடங்குவார். சுமார் 40 ஆண்டுகளாக இந்த பழக்கத்தை கொண்டு வந்தார். புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தனது தங்கை ஆசிரியை பூரணம் வாங்கிக் கொடுக்கும் புது சைக்கிளில் சுற்றப்பயணம் செய்து. மரம் வளர்ப்பை விளக்கி பேசினார். அரசு விழாக்களில் மரக்கன்று நட்டு விழா தொடங்கும் பழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தவர் மரம் தங்கச்சாமி.
இதனால் தனியார் நிலங்களில் மரக்கன்றுகளை வளர்ப்பதை ஊக்கப்படுத்தி வந்ததால் ஆ.ராஜா மத்திய அமைச்சராக இருந்த போது பாராட்டு சான்றிதழும், 2007ம் ஆண்டு தமிழக அரசின் சுற்றுகசூழல் விருதும் வழங்கப்பட்டது. இதுவரை 500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் சேந்தன்குடி கற்பகசோலையில் வந்து தங்கி இருந்து ஆராய்ச்சி செய்துள்ளனர். இதில் வெளிநாட்டு மாணவர்களும் ஏராளம். மரப்பயிரும் பணப்பயிரே.. என்ற வாசகம் அவர் எப்போதும் சொல்லும் வார்த்தைகள். இன்று அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், பேருந்து நிலையங்களில் ஓங்கி உயர்ந்து நிற்கும் பல ஆயிரம் மரங்கள் தங்கச்சாமி வைத்த கன்றுகள் தான்.
கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணித்து செல்வார்கள்.. அதே போல 48 நாட்கள் பச்சை வேட்டி சட்டையுடன் விரதம் இருப்பார் தங்கச்சாமி. இயற்கை தான் நம் கடவுள். நமக்கு நாமே கடவுள் என்ற கோட்பாடு கொண்டதால் 48 நாட்கள் விரதம் முடிந்து வீட்டிற்குள் வைத்துள்ள ஆளுயர கண்ணாடி முன்பு நின்று விரதம் கலைப்பார். இயற்கைகாக மாலை, விரதம் இருந்தவர் தங்கச்சாமி.
தனது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று கண்களை மூடி வணங்கி கண்களை திறக்கச் சொல்வார் எதிரே கடவுளாக நிற்பது நமக்கு நாமே.. ஆம் கண்ணாடியில் விருந்தாளியின் உருவமே தெரியும். புதிய மரக்கன்று விதைகள் நம் தோட்டத்தில் வளர வேண்டும் என்றால் பறவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பறவைகளுக்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை வைத்து பறவைகளை வரவேற்பது அவரது பழக்கம். பல வகையான மரங்கள் அந்த தோட்டத்தில் வளர்ந்து நிற்கிறது. பனைமரங்களை அதிகம் வளர்த்தால் நிலத்தடி நீரை சேமிக்கலாம் என்று தனி தோப்பாக பனை மரங்களை வளர்த்தார்.
ஒரு குழந்தை பிறக்கும் போது ஒரு மரக்கன்று நட்டால் அந்த குழந்தை திருமணத்திற்கு அந்த மரம் உதவும் திருமணத்தில் ஒரு கன்று வைத்தால் பிறக்கும் குழந்தையின் படிப்புக்கு உதவும் என்று ஒவ்வொரு வீட்டிற்கும் மரக்கன்று கொடுத்து வளர்த்து வைத்தார். பள்ளிக்குழந்தைகள் மத்தியில் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்திய முதல் நபராக இருந்தார். எந்த பொது இடத்திலும் மரங்களை வெட்டி முயன்றால் தடுக்கும் முதல் ஆளாக நின்றதால் மரங்கள் பாதுகாக்கப்பட்டது. அவருக்கு துணையாக அவரது துணைவியார்களும், மகன்கள் மரம் தங்க.கண்ணன், காட்டுராஜாவும் நின்றார்கள். கடந்த வாரம் தங்கச்சாமியின் மனைவி இறந்தார். அந்த துயரமே தங்கச்சாமியை விரைந்து அழைத்துக் கொண்டது இயற்கை.
இப்படி மரங்களின் காவலனாக, காதலனாக இருந்த சேந்தன்குடி கற்பகசோலை மரம் பெ.தங்கச்சாமி 31.11.1937 ல் பிறந்து இன்று 16.9.2018 மாலை மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் வைத்த மரங்கள் நிற்கிறது. மரக்கன்று நடவேண்டும் என்ற பணிகள் எழுந்து நிற்கிறது. அந்த பணிகளை இன்று பல லட்சம் இளைஞர்கள் கையில் எடுத்துள்ளனர்.
-nakkheeran.in