சென்னை: தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க முடியாது என்று சிபிஐ அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் விசாரித்து வருகிறது. அதே சமயம் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சிலை கடத்தலில் தமிழக அரசின் நடவடிக்கையை சென்னை ஹைகோர்ட் கண்டித்து இருந்தது. இதனால் தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு குறித்து பதில் அளிக்கும்படி சிபிஐக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இதில் சிபிஐ இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, தமிழக அரசு சிபிஐயை ஆலோசித்து கொள்கை முடிவை எடுக்கவில்லை. இந்த சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க சிபிஐக்கு விருப்பம் இல்லை. இந்த வழக்கை சிபிஐ அமைப்பு விசாரிக்காது என்று சிபிஐ அமைப்பு பதில் அளித்துள்ளது.
இந்த பதிலை கேட்ட நீதிபதிகள், சிபிஐயிடம் ஆலோசிக்காமல் கொள்கை முடிவு எடுத்த அரசை கண்டித்து இருக்கிறார்கள். சிபிஐக்கு இந்த வழக்கை மாற்ற ஏன் முடிவெடுத்தீர்கள் என்று தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளனர்.