பூனைக்கு மணி கட்டுவது யார்?

ஆரம்ப தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் சமய வகுப்பை பாட நேரத்தில் நடத்தும் பொழுது பிள்ளைகளுக்கு ஏதாவது நல்லது செய்யலாம் என்றால் அங்கு கிடைக்கும் 40 நிமிடங்களில் எதையும் சாதிக்க இயலாது என்பது கண்கூடு. இதற்கு காரணம் ஒரு பெரிய எண்ணிக்கையிலான மாணவர்களை முன் வைத்துக் கொண்டு சமய விளக்கங்களைச் சொல்லும் பொழுது 50% மாணவர் கூட அதைக் காது கொடுத்து கேட்பதாகத் தெரியவில்லை. ஏதோ அந்த நேரம் ஒரு பொழுது போக்கு நேரமாகவே பல மாணவர்களுக்குத் தோன்றுகிறது. இவ்வாறான சமய வகுப்புகளில் ஒரு குத்துமதிப்பாக 30% மாணவர்தாம் பயனடைகின்றார் என்று கூறும் நிலை உள்ளது. தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலோனோர் சமய அறிவு பெற்றவர்களாக இல்லை. சமயத்தின்பால் ஆர்வம் கொண்டு செயலாற்றும் ஆசிரியர் வெகு சிலரே. இதனால் வெளியிருந்து வரும் சமய இயக்கங்களின் தொண்டர்கள் வழிதான் தமிழ்ப் பள்ளிகளில் சமய வகுப்பை நடத்த வேண்டியுள்ளது.

இடை நிலைப் பள்ளிகளில் பயிலும் இந்து மாணவர்களின் நிலையைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக உள்ளது. அங்கே சமய நன்நெறி எதுவும் போதிக்கப்படவில்லை.

அமைச்சர் வேதமூர்த்தி அவர்களின் பள்ளி காலத்தில் பள்ளி நேரத்திற்குப் பிறகு தம் சக மாணவர்களை ஒரு கோயிலில் ஒன்று திரட்டி சமய பாடத்தைப் போதித்த காலம் போல் இன்றில்லை. இன்றைய இடைநிலைப் பள்ளி மாணவர்களின் விருப்பு சமயத்தின்பால் இல்லாது மற்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளின் வழியே செல்கின்றது. ஆகையால், இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாற்று வழியைத்தான் அமைச்சர் முன் மொழிய வேண்டும்.

கடந்த நூற்றாண்டின் 70ஆம் 80ஆம் ஆண்டுகளில் மணிமன்றத்தைத் தோற்றுவித்து இளைஞர்களிடையே பொருளாதார, கல்வி, விளையாட்டு, சமயம் போன்ற நிகழ்வுகளில் ஈடுபட வைத்தது நல்லதொரு பயனைக் கொண்டு வந்தது. அந்த நிலை மீண்டும் வர வேண்டுமானால் மணிமன்ற இயக்கத்தை நகர்புறங்களில் அதிகமான கிளைகளுடன் செயல்பட ஆவண செய்ய வேண்டும். நகர் புறத்தில் ஏற்கனவே இருக்கும் மணிமன்ற கிளைகளுக்கு உயிரூட்டம் கொடுக்க வேண்டும். இவை ஒன்றிணைந்து இளைஞர்களுக்கு ஏற்ற நிகழ்வுகளை நடத்தி அவர்களை மடைமாற்றம் செய்யலாம்.

புற நகர் பகுதிகளிலும் மணிமன்ற செயல்பாட்டை விரிவாக்கலாம். அதுபோலவே ருக்குன் தெத்தாங்காவில் இந்திய இளைஞர்கள் பங்கேற்று பல்வேறு பயனுள்ள நல்வழிகளில் தத்தம் ஓய்வு நேரத்தைச் செலவழிக்கலாம். இந்தியர்கள் அதிகமாக வாழும் நகர்புற குடியிருப்புப் பகுதிகளில் பொது இயக்கங்களை ஏற்படுத்தி இளைஞர்களின் ஆக்ககரமான செயலுக்கு வித்திடலாம். இத்தகைய செயல்களின் வழியே இந்திய இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்வதிலிருந்து அணை போட இயலும்.

அரசாங்கம் எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் இந்திய பெற்றோர் தத்தம் பிள்ளைகளின் நந்நடத்தையில் கவனம் செலுத்தாது போனால் அமைச்சரின் அனைத்துச் செயல்களும் விழலுக்கு இறைத்த நீர் போலாகும்.

எது எப்படி இருப்பினும் இந்து கோயில்களை அதிகம் நம்புவதில் பெரும்பயன் எதுவும் கிட்டப் போவதில்லை. இக்கோயில்கள் பெரும்பாலும் தத்தம் சுயநலன் வேண்டியே நடத்தப்படுகின்றன. வெகு சில கோயில்களே தேவாரம் மற்றும் சமய கல்வியைப் போதிக்க உதவுகின்றன.

ஒருகால் அமைச்சர் அவர்கள் அவர்தம் அரசியல் பலத்தை சமய இயக்கங்களின் வழியே பலப்படுத்த விரும்பினால் அதற்கு வேண்டுமானால் கோயில் நிருவாகங்கள் முன் வரும். அதுவும் ஒரு நிபந்தனையுடன். “வருடாவருடம் அரசாங்கம் எங்களுக்கு எவ்வளவு மானியம் கொடுக்கும்?” இது ‘செடிக்’ காட்டிய வழி!!!

-தேனீ